கூள மாதாரி

[singlepic id=9 w=800 h=600 float=center]

 

விட்டு விடுதலையாகி – பெருமாள் முருகனின் கூள மாதாரி

நான் 14 வயது வரை வாழ்ந்திருந்த ஊர் ஆட்டயாம்பதி. கோவையிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிறு கிராமம். இன்று கூட பேருந்துக்கு, 1 கி.மீ நடக்கவேண்டியுள்ள கிராமம். சுமார் நூறு வீடுகளும் இரண்டு கோவில்களும் மையமாக இருக்க, இரண்டு குளங்களுடன் சுற்றிலும் விவசாய நிலம் பரந்து விரிந்து கிடக்கும்.  பள்ளி விடுமுறை நாட்களில், அந்த நிலங்களில் எல்லாம் மாடு மேய்த்து திரிவதும், ஆடு மாடு மேய்க்க வரும் சிறுவர்களுடன் விளையாடுவதும், விளைநிலங்களில் கிடைத்ததை பங்கு போட்டு தின்பதுமாக இருந்தது வாழ்க்கை.

அங்கிருந்து வெகுதூரம் வந்துவிட்டபோதிலும், நாவல் என்னை அந்த தினங்களுக்குக் கொண்டு சென்றது. 20 வருடங்களுக்கு முன்பான வாழ்க்கைக்குச் சென்று, சில காலம் தங்கி வந்ததைப் போல் இருக்கிறது. அதன் சிலபல நுண்ணியவிஷயங்களையும் ஆழ்மனம் இன்னும் நினைவில் வைத்திருப்பதை கண்டு வியப்பே எஞ்சி நிற்கிறது.

கடந்த பத்து வருடங்களில், ஒரு முறையே அந்த ஊருக்குச் சென்றிருக்கிறேன். மீண்டும் சென்று, அந்த இடங்களை எல்லாம் பார்க்கவேண்டும், புகைப்படமெடுத்து என் பால்யகாலத்து எச்சங்களை சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும் போல் மனம் ஆவேசம் கொள்கிறது. எண்ணிப்பார்கையில், ஆசிரியரின் இதேபோன்று ஒரு ஆவேசமே இந்த படைப்பை தந்திருக்கிறது என்று தோன்றுகிறது. எதோ ஒரு கணத்தில், ஆசிரியரின் ஆழ்மனம், என் ஆழ்மனத்துடன்(நன்றி – ஜெயமோகன்) உரையாடிவிட்டது போல் உள்ளது.

கூளமாதாரியை, கதை நாவல் என்பதெற்கெல்லாம் மேலாக, கொங்கு வட்டாரத்தின்,  அதன் மக்களின், அவர்கள் வாழ்வின், பண்பாட்டின் மிகக்கச்சிதமான ஆவணப்படுத்துதலாகவே காணமுடிகிறது.

கவுண்டர்களின் வாழ்க்கை, பண்ணயத்தில் விடப்படும் சிறுவர்களின் உலகம், மேட்டுக் காடுகள், அதில் விவசாயம் செய்ய வாழ்க்கை முழுவதையும் அதில் கொட்டும் மக்கள், ஜாதிய அடுக்குமுறைகள் இருப்பினும் ஒருவரை ஒருவர்  சார்ந்து வாழவேண்டிய நிலை, அனைத்தையும் காட்டிச்செல்கிறது இந்நாவல்.

அடி, வசை, புறக்கணிப்பு, இயலாமை அனைத்தையும் வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டு, அந்தவாழ்வில் கிடைக்கும் சிறுசிறு சந்தோஷங்களுடன் நாட்களை முன்னகர்த்திக் கொண்டிருக்கும் சிறுவர்கள். அவர்களின் தினசரி வாழ்க்கை, ஆண் பெண் நட்பு, பதின்மவயதிற்கான குறுகுறுப்பு, அவர்களின் பெற்றோர்களின் நிலை என அனைத்தையும் தொட்டுச்செல்கிறது.

செல்வனுடனான கூளையனின் நட்பு – இருவரும் ஒரே கட்டிலில் படுத்தது, பனம்பழம் பொறுக்கச் சென்ற சமயம் செல்வன் தன் செருப்பை கூளையனுக்கு கொடுத்தது போன்ற சமயங்களில் கூளையன் அனுபவித்த பேருவகை, மழைவந்த இரவில் செல்வன் கூளையனின் மடியில் புதைந்து கொண்டபோது ‘மழை காற்று மின்னல் எல்லாமே மகிழ்ச்சி மீறிக் கும்மாளமிட்டன. மண்ணில் குதித்துத் தெறிக்கும் நீர்த்துளி ஒன்றாய் கூளையன் மாறிப்போனான்’ என்ற வரியிலேயே அவன் குதூகலமும்  காண்பிக்கப் படுகிறது. இருப்பினும் செல்வன் தான் கவுண்டர் வீட்டுப் பையன் என்பதையும், ஒரு நாளும் அந்த இடைவெளி மாறாது என்பதையும் வெவ்வேறு கணங்களில் காட்டுகிறான்.

//”எங்க கெணறு… என்ன வேண்ணாலும் செய்வன்டா”
“உங்க கெணறுன்னா உங்கோந்துகிட்டுப் புளுத்து போ.” கூளையன் வாயில் எதிர்பாராமல் வந்து விழுந்தது. அவன் வலி முழுக்கவும் அந்த வார்த்தைகளில் ஏறியிருந்தது.//

இந்த இடத்திலேயே இறுதிமுடிவுக்கான விதை விழுந்து விட்டதைப் போல் உள்ளது.

எது கூளையனை அம்முடிவிற்கு வழிநடத்திச் சென்றது?

நெடும்பன் தப்பித்துப் போனபோது, அவன் வழியாக ஒரு மீட்பு வரலாம் என்று கற்பனை செய்து கொண்டிருந்தான்.

//எப்போதாவது எங்கேயாவது நெடும்பனைச் சந்திக்க முடியும் என்று நம்பிக்கை துளிர்த்திருந்தது.//

ஆனால், நெடும்பன் அவ்வளவு தூரம் சென்றும், இரண்டே நாட்களில் ஒரு வேலையில் சேர்ந்தும், அவனது சாதுர்யத்தையெல்லாம் மீறி பிடித்துவந்து விட்டார்கள். கவுண்டர்களுக்கு பண்ணயத்தில் வேலை செய்ய இவர்கள் தேவை. எங்கு சென்றாலும் திருப்பி பிடித்து வந்து விடுவார்கள் என்பதை உணர்கிறான்.

//இன்றைக்கு ஒருநாள் பண்ணயத்திற்குப் போகாமல் இருந்தால் என்ன ஆகிவிடும்?…… நாளைக்குப் போனால் கவுண்டர்  திட்டுவார்.மிஞ்சிப்போனால் இரண்டு அடி வைப்பார். தோலெல்லாம் மரத்துப் போய்த்தான் கிடக்கிறது. வாங்கிக் கொள்ளலாம். அவன் மனதில் திடம் உருவானது. பாட்டி வீட்டை நோக்கி நடந்தான் .//

ஆட்டுக் கிடாய் காணாமல் போனபோதும், தேங்காய் திருடி மாட்டியபோதும் வாங்கிய அடிகளினூடாக அவனுக்குத் தண்டனைகளின் மேல் இருந்த பயம் விலகுகிறது. மேலும் கவுண்டர் ஆடுமேய்க்கவும் பண்ணயத்தில் வேலைசெய்யவும் இவனைச் சார்ந்திருப்பதை, தவறுசெய்தாலும் மீண்டும் மீண்டும் வேலைக்குச் சேர்த்துக்கொள்வதையும் புரிந்துகொள்கிறான்.

பாட்டியுடன் கழித்த அந்த மூன்று நாட்களில், அவன் அனுபவித்த சுதந்திரம், பாட்டியுடன் சேர்ந்து வேலைக்குப் போனது, ஆவாரம்பூக் கொத்துப் போல சிரித்த அந்தப் பெண்ணின் முகம், கூலியாகக் கிடைத்த காசு, கரட்டின் மேல் கழித்த பொழுது அனைத்தும் அவனுள் எதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

//கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனம் உடலை இழந்தது. அந்தரத்தில் மிதப்பது கனமற்ற தக்கைதான் என்றுபட்டது. தக்கையின் விளிம்பில் எங்கிருந்து தொடங்குகிறது என்று தெரியாத நீள நூல் கட்டி இருந்தது. தக்கை அந்த நூலின் பிடியிலிருந்து விடுபட முயன்றது. அதன் தவிப்பும் துள்ளலும் நூலின் முடிச்சை மேலும் இறுக்கமாக்கின. நூல் விட்டால் தக்கை விருப்பப்படி காற்றில் மிதந்து திரியமுடியும். காற்றில் வான்வெளியில் எங்கும் மிதப்பதுதான் தன் வேலை என்பதை உணர்ந்த தக்கைக்கு விடுபடும் வழி தெரியவில்லை. கீழ்நோக்கித் தன்னை அழுத்திப் பார்த்தது. நூல் கொஞ்சம் இளகி மீண்டும் மேலே இழுத்துக்கொண்டது.//

நாவலில் கவித்துவம் கூடிவந்த, அதன் ஆன்மாவைத் தொட்ட வரிகள் இவை. அவனது இருப்பே தக்கை, கவுண்டர் வீட்டுப் பண்ணையம் நீள நூல். அந்த மூன்று நாட்கள், நூலிலிருந்து விடுபட்ட தக்கையாக அவன் மிதந்து திரிந்தான். அந்த விடுதலை உணர்வே அவனை கரட்டின் மேல் ஒரு நாள் முழுதும் உறங்கச் செய்தது. கீழ்நோக்கித் தன்னை அழுத்திப் பார்த்ததுதான் யாரிடமும் சொல்லாமல் 3 நாட்கள் அலைந்து திரிந்தது. விடுபடும் வழி தெரியாத தக்கையாக, சூழ்நிலை அவனை மீண்டும் பண்ணையதிற்குத் திரும்பச்செய்கிறது.

திரும்பி வந்தபின்னும், அவனால் இயல்பு வாழ்க்கைக்குள் செல்ல இயலவில்லை. காலையுணவை உண்ண மறப்பதும், உறங்கிப்போவதும், கூலி செய்த காசை பார்ப்பதும், அந்த பெண்ணை நினைப்பதுமாக கழிகிறது அவன் பொழுது. எதிலும் பற்றின்றி அலைந்து கொண்டிருக்கிறான். செல்வனின் பேச்சும் அவனது நடத்தையும் அவனை மீண்டும் தனது யதார்த்தத்திற்கு திரும்பச் செய்கிறது.

//காற்றில் வான்வெளியில் எங்கும் மிதப்பதுதான் தன் வேலை என்பதை உணர்ந்த தக்கைக்கு விடுபடும் வழி தெரியவில்லை.//

அந்த மூன்று நாட்கள் தான் பார்த்த உலகம் தனக்கு கிடைக்கவே போவதில்லை என்பதை எதோ ஒரு கணத்தில் உணர்கிறான்.  அந்த எண்ணத்திலிருந்து வரும் ஆற்றாமையும் கோபமுமே அவனை அந்த இறுதி முடிவிற்கும் இட்டுச்செல்கிறது.

அனைத்திலிருந்தும் விடுதலை!

****

21 வயதில், பெங்களூர் வந்து, கணிப்பொறித் துறையில் முன்னணி நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். 7 வருடத்தில், நல்ல பதவியில், ஆறிலக்க சம்பளத்தில், அமெரிக்க கனவை துரத்திக் கொண்டிருந்தேன். பணி நிமித்தமாக, 3 மாதம் லண்டனில் இருக்க நேர்ந்தது. உடன் வேலை பார்த்த அனைவரும் இங்கிலாந்து பௌண்டை இந்திய ரூபாயில் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருந்ததால், அனைத்து வார இறுதிகளிலும் தனியே பயணித்தேன். அந்த குளிர்காலப் பயணங்களே என்னை ஓட்டத்தில் இருந்து நிறுத்தி, யோசிக்கவைத்தன. பயணங்களின் முடிவில் நான் அறிந்தது, என் வேர்கள் இருக்கும் இந்த மண்ணையும் பண்பாட்டையும் விட்டு வேறெந்த நாட்டிலும் என்னால் நிரந்தரமாக தங்க முடியாது என்ற உண்மையை. அமெரிக்கா சென்று, MBA படிக்கவேண்டும் என்ற பலவருட முயற்சியை கைவிட்டேன். 

திரும்பி வந்து, மேலாளராக பணியை தொடர்ந்து கொண்டிருந்தேன். சுற்றிலும் பூச்செரியும் மரங்கள் சூழ்ந்த ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். பலநாட்கள் தேடியலைந்து, ஒரு பெண் மட்டுமே தனியாக வாழ வீடு தரமுடியாது போன்ற மறுப்புக்களை சந்தித்த பின், கொஞ்சம் அதிகம் வாடகையிலே அந்த வீடு எனக்கு அமைந்தது. ஆனால், ஒரு நாட்கூட அதன் பால்கனியிலமர்ந்து தேநீர் அருந்தவோ புத்தகங்கள் படிக்கவோ என் பணிச்சுமை என்னை அனுமதிக்கவில்லை. நெடுநாள் தேடி, இணையம் வழியாக கிடைத்து வரவழைத்த புத்தகத்தை 3 மாதங்களுக்குமேலாகியும் திறக்க முடியவில்லை. 

இன்னொரு பக்கம், என் வங்கிக் கணக்கில் அதிகரித்துக் கொண்டே செல்லும் பணம் வெறும் எண்களாக மட்டுமே தெரிய ஆரம்பித்தது. வணிக வளாகங்களுக்குச் செல்வது, பொருட்களை வாங்கிக் குவிப்பது எதிலும் மனம் ஈடுபடவில்லை. 

எட்டு வருடங்களாக, அந்திச் சூரியனை காண முடியாததும், பூத்துக்குலுங்கும் பருவகால மரங்களுடன் இருக்கமுடியாததும், நினைத்த பொழுது பயணிக்க முடியாததும் என்னை அலைக்களிக்கத் தொடங்கியது. மனம் அடிக்கடி, மாடுமேய்த்துத் திரிந்த அந்த நாட்களுக்காக ஏங்கும். அன்று புத்தகமில்லாமல் ஒருநாளும் காட்டுக்கு சென்றது கிடையாது, அந்திச் சூரியனின் செவ்வொளி அடங்கும் வரை பார்த்துவிட்டுத்தான் வீடுதிரும்புவதும்.

மழை பெய்த ஒரு மார்ச் மாத இரவில், இந்த செக்குமாட்டு வேலையிலிருந்து விடுபடுவதென முடிவு செய்து விட்டேன். ஆறு மாதம் முடிந்து, வேலையை விட்டுவிட்டேன். வீட்டிலிருந்தபடியே செய்யும் ஒரு வேலையும் தேடிக்கொண்டேன். என் நாட்களும் என் நேரமும் என் கையில்! 

ஒரு எளிய வாழ்க்கை முறையயை தேர்ந்தெடுத்து, தேவைகளைக் குறைத்துக் கொண்டதால், வருமானத்தையும் அதற்காக செலவிடும் நேரத்தையும் குறைத்துக்கொள்ள முடிந்தது. பயணங்களும், புத்தகங்களும், இசையும், மனிதர்களுமே வாழ்வை நிறைக்கட்டும் என்றிருக்க முடிகிறது.

எண்ணிப்பார்க்கையில்,மனித வாழ்க்கை என்பதே தக்கைகும் நூலுக்குமான போராட்டம் மட்டுமே என்று தோன்றுகிறது. ஒவ்வொருவருக்கும் நூல் மட்டுமே வேறுபடுகிறது. கலை, ஆன்மீகம், உறவுகள், உணர்ச்சிகள், லௌகீகம் என பல வடிவங்கள். போராட்டத்தின் வழி நாம் அடைய நினைப்பது நூலிலிருந்து விடுதலை, அது முடியாத பட்சத்தில் நூலின் நீளத்தையாவது அதிகரிப்பது. தான் ஒரு தக்கை என்பத்தை, காற்றில் வான்வெளியில் எங்கும் மிதப்பதுதான் தன் வேலை என்பதை, ஆனால் தான் ஒரு நூலில் கட்டுண்டு கிடப்பதை அறியும் கணம் முதல் தொடங்குகிறது போராட்டம். ஆசிர்வதிக்கப்பட்ட சிலரால் விட்டு விடுதலையாக முடிகிறது. இன்னும் சிலர் நூலின் நீளத்தை அதிகரித்துக் கொள்கின்றனர். பலர் தக்கை, நூல், வான்வெளி எதையுமே அறியாமல் வந்து, வாழ்ந்து, சென்று விடுகின்றனர். அறிதல் நிகழ்ந்தபின்னும், எதுவுமே செய்ய இயலாமல் போராட்டத்திலேயே இருப்பவர்களுக்கு, அறிதலே நிகழாதவர்கள் கூட ஆசிர்வதிக்கப் பட்டவர்களாக தெரிகிறார்கள். 

நூலில் கட்டுண்டு, பின் விடுபட்டதனாலேயே, வாழ்வின் சிறு சிறு சந்தோஷங்களையும் ஆழ்ந்து அனுபவிக்க முடிகிறது. வாழ்வு இனியும் பல கட்டங்களில், பல நூல்களை நம்முடன் பிணைக்கும். வேண்டி நிற்பதெல்லாம் அறிதலின் ஒளிபட்டு தக்கையும் நூலும் நம் அகக் கண்களுக்குப் புலப்பட வேண்டுமென்பதே!