இலக்கிய இயக்கங்கள் – பகுதி – 1

பகுதி – 1 

இலக்கிய இயக்கங்கள் என்பவை சமூக,அரசியல் சூழல்களில் வைத்து இலக்கியப் படைப்புகளை மதிப்பிட்டு நோக்கவும், அவற்றை முன்வைத்து நமது அறிதலை தொகுத்துக் கொள்ளவும் உதவும் ஒரு பகுப்பு முறை ஆகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகத்தின் தேவையை முன்வைத்து, அறிவியக்கம் நிகழ்த்தும் தேடலை, புரிந்துகொள்ளத் தேவையான ஒரு வரைபடத்தை தருவது இந்தக் கோட்பாடுகளே. மொழியியல், தத்துவம், மதம், அரசியல், அறிவியல் போன்ற துறைகளின் உதவியுடன்,  இலக்கியம் மீதான பல்வேறு  கோணங்களினாலான ஆய்வுக்கும்  இவை உதவும்.

மறுமலர்ச்சிக் காலகட்டம் (Renaissance)

நவீனத்துவம் என்பது நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்து சமூகமாகவே தன்னை உணர்ந்த மனிதன் சமூகத்திலிருந்தும், சமூகமாக இணைக்கும் மதங்களிலிருந்தும் அரசுகளிடமிருந்தும் தன்னை துண்டித்துக் கொள்ளும் நீண்ட போராட்டமே. இந்தப் போராட்டம் வெறும் எதிர்ப்புணர்ச்சி மட்டுமல்ல. தன்னை உருவாக்கிய இந்த பிரபஞ்சத்தில், தன்னுடைய இடத்தை தானே பிரித்து உருவாக்கி, சுயத்தை அறிந்து கொள்ள செய்த ஒரு முயற்சி. இதன் முதல் புள்ளி தோன்றியது, 14-ஆம் நூற்றாண்டில் துவங்கிய, ஐரோப்பிய மருமலர்ச்சிக் காலகட்டத்தில் எனலாம். அதுவேதான்  கலை இலக்கியக் கோட்பாடுகளின் மங்கலான துவக்கப் புள்ளியும் கூட .

அதற்கு முன்பு வரை கலை வெளிப்பாடு என்பது ஒரு சமூகத்தின் கூட்டு வெளிப்பாடாகவே இருந்து வந்திருகிறது.  படைப்பை இயக்கும் தரிசனம் என்பது அந்த சமூகத்தின் பண்பாட்டிலிருந்தும் மதத்திலிருந்துமே வெளிப்பட்டது. குட்டன்பர்கின் அச்சு இயந்திரத்தின் வருகையால் புத்தகங்கள் வெளிவரத் துவங்கின. அதுவரை வாசிப்பு என்பது  பொது இடத்தில் திரளான மக்களுக்கு வாசித்துக் காண்பிக்கப்படும் செயல்பாடகவே இருந்து வந்தது. முதல் முறையாக மனிதர்கள் தனிமையில் அமர்ந்து, புத்தகங்களை வாசிப்பதென்பது, தனிப்பட்ட, தனக்குள் ஆழ்ந்திருக்கும் செயலாகியது. பொதுவில் வாசிக்கப்படும் நூலானது, உள்ளடக்கத்திலும் அனைவருக்கும் பொதுவானதாக, பெரும்பாலும் மத நூல்களாகவும் பேரிலக்கியங்களாகவும் இருந்தது. தனிப்பட்ட  வாசிப்பிற்கு  வந்த பின்பு, தனிப்பட்ட சிந்தனையும் அதன் விளைவாக தனி மனிதன் சார்ந்த கருத்துக்களும் உருவாகி வரத்துவங்கின. பைபிள் அச்சிடப்பட்டு, முதல் முறையாக சாமானியர்களின் கைகளில் கிடைக்கத் துவங்கியது. கடவுளுடன் உரையாட மதகுருக்களும், சபையும் தேவையின்றிப் போனது மனிதர்களை சுதந்திரமானவர்களாக ஆகியது.

மறுமலர்ச்சிக் காலத்தில், இத்தாலியைச் சார்ந்த பிலிப்போ  ப்ரூனலெஸ்கி  (Filippo Brunelleschi)  என்பவர் முதல் முறையாக முப்பரிமாண  தோற்றத்தை இருபரிமாணமாக ஒரு கோட்டோவியத்தில் கொண்டு வர முடியுமென்று நிரூபித்துக் காட்டினார். அதுவரையில் கட்டிடக் கலையில் கலைஞர் என்பவர் கட்டுமானத்தை நிருபுபவராகவே இருந்தார். எனவே கைவினைக்கும் கலைக்குமான கோடுகளும் மங்கலாகவே இருந்தன. இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு கலைஞன் படைப்பைக் குறிந்த தீக்ஷண்யம் மட்டும் கொண்டிருந்தால் கூட போதும், அதை நிறைவேற்ற கைவினைஞர்களைப்  பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலை வந்தது. கட்டுமானப் பணியாளர் என்பவர் கட்டிடக் கலைஞர் ஆனார். இந்தப் புள்ளியிலிருந்துதான் படைப்பின் தரிசனம் என்பது சமூகத்தின்  விழுமியங்களிலிருந்து தனிப்பட்ட கலைஞனின் தரிசனம் என்ற பார்வைக்கு நகர்ந்தது. ஒத்த தத்துவ தரிசனத்தால் இயக்கப் பட்டவர்கள் ஒரு இயக்கமாக, படைப்புச் செயலை முன்னெடுக்கத் துவங்கினர். அவர்களின் இயக்கம் அவர்களின் தரிசனத்தால் பெயரிடப்பட்டு அப்படியே கோட்பாடுகளாக உருப்பெற்றன. ஒரு வகையில் நவீனக் கண்டுபிடிப்புகளால்  உருவாகிக் கொண்டிருந்த நவீன உலகம் புதிய கலை வெளிப்பாட்டுப் போக்குகளை கண்டடைய இந்த இயக்கங்களே காரணாமாக இருந்தன.

அப்படி தோன்றிய முதல் கலை இயக்கமென்று தனித்துவ இயக்கத்தைக் (Mannerism) குறிப்பிடலாம். ஐரோப்பிய சமூகமெங்கும் பரவாலான செல்வாக்கு பெற்றிருந்த, பொது வெளிப்பாட்டு கலைக்கான  அடிப்படையாக, கிரேக்க கலையின் ஒத்திசைவு மிக்கதும் அறிவார்ந்த கலை என்ற அழகியலை அடிப்படியாகக் கொண்டதுமான சமூகத்தில், தனித்துவமிக்க பார்வையையும் மனிதாபிமானத்தையும்  முன்வைத்த முதல் இயக்கம். கலையும் சமூகமும் அடையக்கூடிய அனைத்து  உயரங்களையும் அதுவரையிலான மருமலர்ச்சிக் காலத்து கலை அடைந்து விட்டது, எனவே இங்கிருந்து அதன் உச்ச பட்ச திறனைக் கொண்டு, கலைஞன் தன் தனிப்பட்ட வெளிபாட்டை முன் வைக்க வேண்டுமென்று அறிவித்துக் கொண்ட இயக்கம். நவீனத்துவம் துலங்கத் துவங்கிய முதற்புள்ளி இது எனலாம்.

மறுமலர்ச்சிக் காலத்தில் முதன்மையான இலக்கியவடிவங்களாக கவிதையும் நாடகமும் இருந்தன. இலக்கிய வடிவமென்பது மரபார்ந்த தன்மை உடையதாகவும், தெளிவான வரையறைகளைக் கொண்டதாகவும் இருந்தது.  ஷேக்ஸ்பியரும் ஜான் மில்டனும் இக்காலகட்டத்தின் முதன்மைப் படைப்பாளிகள்.

தனிமனிதப் பார்வையை முன் வைத்துத் துவங்கிய தனித்துவவாதத்தை எதிர்த்து,  கிறித்துவ மதவாதத்தின் ஆதரவில் தோன்றிய இயக்கம் பரோக்(Baroque) கலை இயக்கம். அறிவார்ந்த, ஒழுங்கமைதி மிக்க, மரபின் பழம்பெருமையை முன்வைத்து துவங்கிய மறுமலர்ச்சிக் காலக் கலையிலிருந்து முன்னகர்ந்து, மக்களைக் கவர, நாடகீயமான கலையாக தன்னை மாற்றிக் கொண்டது பரோக் கலை இயக்கம். ஒரு வகையில் அது வரை ஆலயங்களிலும், அரண்மனைகளிலும் மட்டுமே இருந்து வந்த கலை பொதுமக்களுக்கும் கிடைக்கத் துவங்கியது, தனித்துவ வாதத்தின் கொடை எனலாம்.

பொது மக்களை நோக்கி நகரத்து துவங்கிய கலை என்பது சாரம்சத்திலும் பொதுத் தன்மையை கொண்டிருக்கத் துவங்கியது. கலையின் பேசுபொருட்களாக உயர்குடி மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களான வாசிப்பும், பயணங்களும், கேளிக்கை அம்சங்களான விருந்துகளும் நடனங்களும் இடம் பெறத் துவங்கின. ரொகோகோ(Rococo) எனப்படும் இந்தக் கலை இயக்கம் பெரிதும் உயர்குடி மக்களின் வாழ்க்கைச்  சூழலுக்குள்ளேயே இருந்தது. எனவே அதன் அதிகபட்ச வெளிபாடு என்பது பரோகின் பெரிய படைப்புகளுக்கு எதிராக அலங்காரமான, ஆடம்பரமான சிறய பொருட்களாக வெளிப்படத் துவங்கின. அவற்றின் நோக்கம் உயர்குடி மக்களின் இல்லங்களை அலங்கரிப்பதும், அவர்களின் மேட்டிமைத்தனத்திற்குச்  சான்றுரைப்பதாகவுமே இருந்தது.

இந்த மாற்றங்களினூடே இன்னொரு விஷயமும் நிகழத் துவங்குகிறது. கலையின் மையம் மதத்தின் அதிகார மையமான ரோமிலிருந்து, பிரான்சிற்கு நகரத் துவங்குகிறது. 14-ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் துவங்கி, 16-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கும் பரவிய இந்த இயக்கம், 17 -ஆம் நூற்றாண்டில் முடிவிற்கு வந்தது.

அறிவொளிக்காலம்  (Age of Enlightenment)

தனி மனித சிந்தனைக்கான வாய்ப்புகளை மருமலர்ச்சிக்காலம் பேசியதென்றால், அது உருப்பெறுவதற்கான கருவிகளையும் உத்திகளையும் அறிவொளிக் காலகட்டம் அமைத்துக் கொடுத்தது எனலாம். 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிவியல் துறையின் வளர்ச்சியும் தொழில் புரட்சியும் அறிவொளி இயக்கத்திற்கு வித்திட்டன. மதம் சார்ந்தும் மரபு சார்ந்தும் அதுவரையில் இருந்த அனைத்து நம்பிக்கைகளும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, அறிவார்ந்த சிந்தனைகளும், தனிநபர்வாதமும் முன்வைக்கப்பட்டன.

சிந்தனைக்கான கருவிகளான தர்க்கம், விவாதம் மற்றும் அறிவியலின் வழி உலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகண்டு விடலாம் என்ற கருத்து மேலோங்கியது. தொழில்புரட்சியின் நீட்சியாக கல்வியும் வாசிப்பும் மேலும் விரிவடைந்தது. முதன்முதலாக வாடகை நூலகங்கள் திறக்கப்பட்டன. சமுதாய உருவாக்கத்தில் பத்திரிகை துறையின் பங்கும் அதிகரிக்கத் துவங்கியது. படித்தவர்கள் பொது இடங்களில் ஓன்று கூடி மேலான சமுதாயத்திற்கான வழிமுறைகளை விவாதிக்கத் தொடங்கினர். சுதந்திரமும் ஜனநாயகமும் அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகள், திருச்சபையோ முடியாட்சியோ அளிக்கும் கொடை அல்ல என்ற கருத்து உருத்திரண்டு வந்தது.

அறிவொளிக்காலத்து இலக்கியம் தர்க்கம், அறிவு, சீரான அமைப்பு, சமுதாய ஒழுங்கு முறை, அங்கதம் போன்ற பண்புகளைக்கொண்டிருந்தது. மொழியின் இலக்கணமும், வார்த்தைகளும் நெறிப்படித்தப் பட்டன, அகராதிகளின் பயன்பாடும் அதிகரித்தது. சாமுவேல் ஜான்சன் தொகுத்த ஆங்கில அகராதி, அம்மொழியின் வளர்ச்சியிலும் தரப்படுத்துதலிலும் பெரும் பங்காற்றியது. அலெக்சாண்டர் போப்(Alexander Pope)  கிரேக்க காவியங்களான இலியட்(Iliad) மற்றும் ஒடிசியை(Odyssey) ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். கவித்துவ நுண்ணுணர்வின் மூலமே சிறந்த மொழியாக்கங்கள் சாத்தியம் என்பதை உணர்த்தி, மொழிபெயர்ப்பு என்பதை ஒரு கலை வடிவமாக நிறுவினார். நாவல், கவிதை, நாடகம் சுயசரிதை, நாட்குறிப்பு, கட்டுரை, கடிதம்  போன்ற பலதரட்ட வடிவங்களில் படைப்புகள் வெளிவந்தன. சமூகத்தில் தனி மனிதனின் பங்கு குறித்த கேள்விகள் எழுந்த காலகட்டமாதலால், தனி மனிதனின் சிந்தனைப் போக்குகளைக் விவரிக்கும் தன்மைஇடக் கூற்று (First person Narrative) படைப்புகளுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது.

இலக்கியம்  தெளிவான வடிவமாக துலங்கத் துவங்கிய இந்தக் காலகட்டத்தில் படைப்பில் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. படைப்பு என்பது இலட்சிய சமூகத்தை முன்வைப்பதாகவும், தேவைப்படும் இடங்களில் விமர்சனங்களை வைக்கும் ஊடகமாகவும் கையாளப் பட்டது. முன் மாதிரியான சமூகத்தை முன்வைத்து ரூசோ எழுதிய எமிலியும்,  நடப்பு  சமூகத்தை அங்கதம் மூலமாக விமர்சித்து எழுதிய ஜோனதன் ஸ்விப்டின்  கலிவரின் பயணங்கள் போன்ற படைப்புகளும் முன்னோடிகளாயின. பரவலான, சுதந்திரமான கல்வி சிறந்த குடிமக்களை உருவாக்கும் என்ற கருத்தை ரூசோ முன்வைத்தார்.  

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நடைபெற்ற பல புரட்சிகளுக்கு இந்த இயக்கம் ஒரு தொடக்கப்புள்ளியாக இருந்தது. பிரெஞ்சு புரட்சிக்குப்பின் அறிவொளிக் காலகட்டம் முடிவிற்கு வந்தது.

கற்பனாவாதம் (Romanticism)

18-ஆம் நூற்றாண்டின் இறுதியில், தொழில் புரட்சியின் விளைவாக அதிக மக்கள் நகரங்களை நோக்கிச் சென்றனர், தொழில்துறையின் வளர்ச்சியால் இயற்கை  மாசடைதலும் நிகழத்துவங்கியிருந்தது. இந்த மாற்றங்களுக்கு எதிராக,  கற்பனாவாதம் உருப்பெற்று வந்தது. இம்மானுவேல் காண்டின் சிந்தனைகளும் இவ்வியக்கம் உருவாக காரணமாக இருந்தன.

அறிவொளி இயக்கம் இலட்சிய சமூகத்தை முன்மாதிரியாக வைத்ததென்றால், கற்பனாவாதம் இலட்சிய மனிதனை, கற்பனைமூலம் வளர்த்தெடுத்த கதை நாயகர்கள் வழி முன்மாதிரிகளாக வைத்தது. அறிவொளி இயக்கம் சமூகத்தின் முன்னேற்றத்தை முன்னிருத்தியதென்றால், கற்பனாவாதம்  தனி மனிதனின் உணர்ச்சிகளின் மீது கவனம் கொண்டது. பகுத்தறிவிற்கு பதில்  உள்ளுணர்வும், கற்பனையும், தனி மனித  உணர்சிகளும் முன் வைக்கப்பட்டன. நகர மயமாதலுக்கு பதிலாக எளிமையான கிராமப் புற வாழ்க்கையும் இயற்கையும் முன்வைக்கப்பட்டன.

கற்பனவாதகால படைப்புகள் வாழ்வனுபாங்களையும் உணர்ச்சிகளையும்  கற்பனைமூலம் வளர்த்து உச்சத்துக்கு கொண்டு செல்பவையாகவும், அக உணர்ச்சிகளை இயற்கையுடன் இணைத்து காண்பவையாகவும் இருந்தன. உணர்ச்சிகள் கொந்தளிப்பவையாகவும் மொழி உத்வேகம் மிக்கதாகவும் இருந்தது. இக்காலகட்டத்தின் முன்னோடிப் படைப்பாளிகளாக ஷெல்லி, கீட்ஸ், பைரன், வில்லியம் பிளேக், வோர்ட்ஸ்வொர்த்  இருந்தனர்.

அறிவொளி காலகட்டத்தில், படைப்பின் அமைப்பு மற்றும் உள்ளடக்கத்தின் ஒழுங்கு மீதிருந்த எதிர்பார்ப்பு தளர்த்தப்பட்டு, கலை வெளிப்பாட்டுக்கான பல்வேறு மாதிரிகள் முன்வைக்கப்பட்டன. படைப்பின் உருவாக்கத்தில், கலைஞன் இயற்கையுடன் உரையாடுதலின் வழி, படைப்பு உருவாக்கப்படுகிறது, அதனால் இயற்கையும் படைப்பின் உருவாக்கத்தில் பங்குகொள்கிறது போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அறிவின் வழி இயற்கையை ஆராயும் முறையை விடுத்து, கற்பனை மற்றும் உள்ளுணர்வின் துணைகொண்டு இயற்கையை அறிய முனைந்தனர். 

காதலும் ஏக்கமும், தனிமையும் கொண்டு இயற்கைமுன் நிற்கும் நாயகர்களை முன்னிறுத்திய காலகட்டம் இது. கற்பனாவாத கவிஞர்கள் அவர்களின் கற்பனை உலகுக்குள் மூழ்கியிருந்தனர். அன்றாடப் பிரச்சனைகளையும், நவீனமயமாக்கலால் சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றியும் பேச ஒரு புது வடிவம் தேவைப் பட்டது.

 

Leave a Reply