இலக்கிய இயக்கங்கள் – பகுதி – 2

 

பகுதி – 2

மீ இறையியல் (Transcendentalism)

கற்பனாவாத இயக்கத்தின் நீட்சியாக அமெரிக்காவில் தோன்றிய இயக்கம் என்று மீ இறையியலை (Transcendentalism) குறிப்பிடலாம். கற்பனாவாதம் இயற்கையை முழுமையுடையதாகவும் மனிதனை குறைபாடுள்ளவனாகவும் கண்டபோது, மீ இறையியல் ஒவ்வொரு தனி மனித ஆன்மாவையும் பிரபஞ்சத்தின் முழுமையை உள்ளடக்கியதாகவும், கடவுளை உலகின் ஆன்மாக்களின் தொகுப்பாகவும் கண்டது. சமூகத்தின் வழியும் புலன்களின் வழியும் நம்மை வந்தடையும் புறவயமான அறிவின் எல்லைகளைச் சுட்டி, இயற்கையை அவதானித்து, அதிலிருந்து குறியீடுகளைப் பெற்றுக்கொள்வது வழியாகவும், உள்ளுணர்வு சார்ந்த அகவயமான தேடல்கள் வழியகவும் தனி மனிதன் அறிதலும் ஞானமும் பெற்று முழுமையை நோக்கிச் செல்லலாம் என்றது.  அவ்வாறு மேம்படுத்தப்பட்ட தனிமனிதனின் வழி சமூகத்திலும் மாற்றம் கொண்டுவர இயலும் என்றெண்ணியது.

கற்பனாவாதத்தில் சமூக மாற்றத்திற்கான உந்துதல்கள் இல்லாமல் அழகியலிலும், தனிமனித உணர்ச்சிகளிலும், தன்முனைப்பிலும் மட்டுமே கவனம் இருந்தது. அறிவொளிக்காலம் தனி மனிதனை சமூகத்தின் அங்கமாகக் கொண்டதென்றால், கற்பனாவாதகாலம் தனி மனிதனை இயற்கையின் அங்கமாகக் கண்டது. மீஇறையியல் இயற்கையின் முழுமையை தன்னுள்ளும் கொண்டுள்ள தனி மனிதன், தான் வாழும் சமூகத்தில் மாற்றம் கொண்டுவருதலைப் பற்றி பேசியது.

பெருகி வந்த நுகர்வுக் கலாச்சாரத்தை மறுத்து, எளிமையான வாழ்கை முறையையும், தற்சார்பையும் முன்வைத்தது. அதற்கான தூண்டலை கீழைத் தத்துவங்களிலும் , ஜெர்மானிய கருதுமுதல்வாதத்திலிருந்தும்  பெற்றுக் கொண்டது. இக்காலகடத்தின் முதன்மைப் படைப்பாளிகளாக எமெர்சன்,  தோரோ, மார்கரெட் புல்லர் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

 விக்டோரியன் காலகட்டம் (Victorian Era)

19 -ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  இயந்திர மயமாக்கலும், நீராவி இயந்திரங்களின் வருகையும் தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்கி, அதிக மக்களை மேலும் மேலும்  நகரங்களை நோக்கிக் கொண்டு சென்றது. வேளாண்மை நலிவடைந்து, தொழிற்சாலைகளில் வேலைதேடி ஏழை  விவசாயிகள் நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். நகரங்களில் புதிதாக உருக்கொண்ட  முதலாளித்துவ நடுத்தர வர்க்கம் ஏழைகள் மீது ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது.

நாவல் என்ற வடிவம் இலக்கிய முக்கியத்துவம் பெறத்துவங்கியது இந்த காலகட்டத்தில் தான். அதுவரையிலும்,  கவிதைகளே இலக்கியத்தில் உச்சமாக கருதப் பட்டன. கவிதைகளில் சாத்தியப்படும் உன்னதமாக்கல்(Sublimation), நாவல் வடிவில் இயலாது என்பாதால், நாவல்கள்  கவிதைகளை விட தாழ்ந்த இடத்திலேயே வைக்கப் பட்டிருந்தன. விக்டோரியன் காலகட்டத்தில் எழுதிய சார்லஸ் டிக்கன்ஸ் (Charles Dickens) போன்றோர் இக்கருத்தை மாற்றி, நாவல் வடிவின் கலை வெளிப்பாட்டுச் சாத்தியங்களை நிறுவினர். கல்விகற்ற நடுத்தர வர்க்கத்தின் முதன்மை கலை வடிவமாக நாவல் மாறியதும், அதற்கென ஒரு வெகுஜன சந்தை சாத்தியப்பட்டது. இதழ்களில் தொடர்களாக நாவல்கள் பிரசுரமாகத் துவங்கின. டிக்கன்ஸ் இங்கிலாந்தின் புகழ்பெற்ற நாவலாசிரியராக அறியப்பட்டார், கலைஞர்களை பொதுமக்கள் பிரபலங்களாக கொண்டாடும்  போக்கின் முன்னோடியாக அவர் இருந்தார்.

இன்றும் நாவல்களிலும் திரைப்படங்களிலும் காணப்படும் நேர்கோட்டு கதை அமைப்பு முறை இந்தக் காலகட்டத்தில் தான் அறிமுகப்படுத்தப் பட்டது. கடினமான வாழ்க்கைச் சுழலில் இருந்து, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இறுதியில் வெற்றி பெரும் லட்சிய நாயகர்கள் உருவகிக்கப் பட்டனர். நற்பண்புகள் அங்கீகரிக்கபடுதலும், தவறான செயல்கள் தண்டிக்கப்படுத்தலும் வழி, வாசகனின் மனதில் அற உணர்ச்சிகள் தூண்டப்பட்டன.

அதுவரையில் இருந்திராத அளவில், சமூகத்தின் பிரச்சனைகளை நேரடியாகப் பேசும் இலக்கியம் பொதுஜனங்களை அதிக அளவில் சென்றடைந்தது. அதன் வழி சமூக மாற்றத்தை கொண்டுவருவது, இலக்கியவாதியின் இலட்சிய பிம்பமாக மாறியது. மோசமான பணிச்சூழல், பரவலான வறுமை, குழந்தைத் தொழிலாளிகள், சமூகத்தில் பெண்களின் இடம் போன்ற பிரச்சனைகளை சித்தரித்து படைப்புகள் வெளிவந்தன.

கவிதைகளின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் மாற்றம் வந்தது. கவிஞர்கள் கருதுகோள் மற்றும் மீபொருண்மை சார்ந்த கற்பனாவாதக் கால படைப்பு மொழியிலிருந்து நகர்ந்து எளிய யதார்த்தவாத மொழியில், சமூகம் சார்ந்த விஷயங்களை எழுதத் துவங்கினர்.

 யதார்த்தவாதம் (Realism)

விக்டோரியன் காலகட்டத்திலேயே, பிரெஞ்சு புரசிக்குப்பின், பிரான்சை மையமாகக் கொண்டு உருவான இன்னொரு இயக்கம் யதார்த்தவாதம்.

அதுவரை, கலை வெளிப்பாடு என்பது, வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்ற கற்பனையும் இலட்சியவாதத்தையும் முன்வைத்ததென்றால்,  யதார்த்தவாதம் வாழ்வின் யதார்த்தங்களை உள்ளது உள்ளபடியே கலையில் காட்ட முனைந்தது. கற்பனாவாதத்தின் கூறுகளான மிகைப்படுத்தப்பட்ட உணர்வு நிலைகள், நாடகீயத்தருணங்கள், மிகை  அலங்காரங்கள், அகவயமான பார்வை போன்றவற்றை மறுத்தது. சாமானியனின் வாழ்வு என்பது,  பெரும்நிகழ்களால், அதிரவைக்கும் திருப்பங்களால், தொடர் அவலங்களாலும் ஆனது அல்ல, எனவே படைப்பும் அந்தக் கூறுகளைக் கொண்டிருக்கவேண்டியதில்லை என்பதே யதார்த்தவாத எழுத்தின் சாராம்சம்.

சமகால மக்களின் அன்றாட வாழ்வை புறவய நோக்குடன் உண்மையாகவும் துல்லியமாகவும் காட்ட முற்பட்டது. புகைப்படக் கலையின் தோற்றமும், இலக்கியத்தில் இந்த புறவயமான யதார்த்தத்தின் சரிநிகர் சித்தரிப்பிற்கு உந்துதலாக இருந்தது. மனித உளவியல் ஆராய்ச்சிகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் தாக்கத்தையும் யதார்த்தவாத படைப்புகளில் காணலாம்.

சமூக காரணிகள் மற்றும் வாழும் சூழலே தனி நபரின் குண நலன்களையும் ஆளுமையையும் தீர்மானிக்கின்றன.   மனித அகம் என்பது பல்வேறுபட்ட உந்துதல்கள், அச்சங்கள் ஆசைகளால் ஆனது. அவை சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி ஒன்றோடொன்று முரண்படுகின்றன அல்லது இணைந்து செயல்படுகின்றன என்பதைப் பொறுத்தே அவனது ஆளுமை அமைகிறது.  யதார்த்தவாத படைப்புகள், இந்த அகப் போராட்டங்களை, புறவய நோக்குடன் வாசகனுக்கு முன்வைத்தன.

கதை கூறும் முறைகளிலும் மாற்றம் வந்தது. ஒற்றை நோக்குடன், அனைத்து கதைமாந்தர்களும் சம்பவங்களும் விவரிக்கப் படுவதற்கு பதிலாக, வெவ்வேறு கதாபாத்திரங்களின் அக ஓட்டங்கள் வழியாக அல்லது அவர்களின் பார்வைக் கோணத்தின் சித்தரிப்புகளினூடாக சம்பவங்கள் விவரிக்கப் பட்டன. இதில் கதாமாந்தர்களின் நம்பிக்கைகளும் முன்முடிவுகளும் கலந்தே வாசகன் முன் வைக்கப் பட்டன. கதைக்குள் இன்னொரு கதை போன்ற வடிவங்களும் வந்தன. இதுபோன்ற உத்திகளின் வழி, ஒற்றைப் படையாக அறுதியிட்டுக் கூற முடியாததும், அவரவர்கேற்ப மாறிக்கொண்டே இருக்கக் கூடியதுமான யதார்த்தத்தின் தன்மையை, இயன்ற அளவு துல்லியமாக வாசகன் முன் உருவாக்கிக் காட்ட முயன்றன.

மார்க் டுவைன் (Mark Twain), ஜார்ஜ் எலியட் (George Eliot), ஹென்றி ஜேம்ஸ் (Henry James) போன்றோர் யதார்த்தவாத எழுத்து முறைக்கு முன்னோடிகளாக இருந்தனர்.

இயல்புவாதம் (Naturalism)

யதார்த்த வாதம் மேலும் வளர்ச்சி பெற்று, அதன் தீவிர வடிவமாக இயல்புவாதம் உருப்பெற்றது. 19 -ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்,   சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை, மனித சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு பொருத்திப் பார்க்கும் போக்கு இருந்தது (Social Darwinism). அந்தப் போக்கின் தாக்கம் கொண்ட இலக்கிய வடிவம் என இயல்புவாதத்தைக் கூறலாம்.

மனிதனின் ஆளுமை, அவனது செயல்கள், நம்பிக்கைகைள் ஆகியவற்றின் உருவாக்கத்தில் சமூக காரணிகளும் வாழும் சூழலும் பாதிப்பு செலுத்தும் அளவிற்கே, அவனது பாரம்பரியப்பண்புகளும் இன வரலாறும் முக்கியத்துவம் பெருகின்றன என்ற கொள்கையை முன்வைத்து எழுதப்பட்டவையே இயல்புவாத படைப்புகள். அவை யதார்த்த வாதத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கி, உணர்ச்சிகளைப் பின்தள்ளி, மனிதனை இயற்கையின் பரிணாம வளர்ச்சியின் பகுதியாகக் கண்டு ஒரு பார்வையாளனின் அக விலகலுடன் யதார்த்தைச் சித்தரித்தன.

அதுவரையிலும் இலக்கியத்தில் இல்லாத அளவுக்கு இயல்புவாதத்தில் மனித மனத்தின் மிருகத் தன்மை கொண்ட இருண்ட பக்கங்களை வெளிபடுத்தும் படைப்புகள் வெளிவரத் துவங்கின. அவற்றின் பேசுபொருளாக இனவாதம், காமம், வன்முறை, சிந்தனைகளின் முற்சாய்பு மற்றும் இழிவுதன்மை போன்றவை  இருந்தன.  இயல்புவாத இலக்கியத்திற்கு சிறந்த உதாரணமாக எமிலி ஜோலாவின் ‘Les  Rougon-Macquart’ நாவலைக் கூறலாம்.

Leave a Reply