இலக்கிய இயக்கங்கள் – பகுதி – 3

நவீனத்துவம் (Modernism)

நவீனத்துவம் என்பது நாம் சற்று முன்பு குறிப்பிட்டது போல, 14-ஆம் நூற்றாண்டில் மதத்திடமிருந்தும் அரசுகளிடமிருந்தும், 17-ஆம் நூற்றாண்டில் அறிவிடமிருந்தும், 18-ஆம் நூற்றாண்டில் உணர்ச்சிகளிடமிருந்தும் தன்னுடைய தனி மனித இருப்பை வரையறை செய்து, தன்னை முன்வைத்துக் கொள்ளும் முயற்சியே. எதிலிருந்து விடுதலை அடைவது என்பதும் எதை முன்வைத்து அதைச் செய்வது என்பதுவுமே இந்தத் தேடல்களின் ஆதரமாக இருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பகுதிகளில் புகைப்படக் கலையின் வருகையும்  பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னான நாட்களும் தொழில் நுட்ப மாறுதல்களும்  இந்த ஒட்டுமொத்தப் பயணத்தை உச்சம் கொள்ளச் செய்தன. அதுவரையிலான விக்டோரியன் மதிப்பீடுகளின் பொருளின்மையை உணர்ந்து புதிய பண்பாட்டிற்கான தேடலை துவக்கி இருந்தனர்.

[singlepic id=52 w=800 h=600 float=center]

மார்க்ஸின் சமூகம் சார்ந்த கருத்துக்களும், பிராய்ட்டின் தனி மனிதன் சார்ந்த கருத்துக்களும், டார்வினின் இயற்கை சார்ந்த கருத்துக்களும், சசூரின் (Ferdinand de Saussure) மொழியியல் கோட்பாடுகளும், ஐன்ஸ்டீனின்  காலம் மற்றும் சார்பியல் கோட்பாடுகளும் மேற்கில் அதுவரை நிலவிவந்த சிந்தனைகளை உருமாற்றம் கொள்ளச் செய்தன. குடிமைப் பண்பு கொண்ட  சமூகம் , வரலாறு, தூய தர்க்கம், உள்ளுணர்வு மற்றும் இயற்கை என அணைத்து தரப்பையும் முன் வைத்து சிந்தனைகள் வெளிப்படத் துவங்கின.

1870-களில் வரலாறும் சமூகமும் இயல்பாகவே முன்னகர்ந்து கொண்டிருகின்றன என்ற கருத்து கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. எனவே நவீனத்துவர்கள் வரலாற்றை நிராகரித்து, தனி மனித இருப்பையே பிரதானமாக முன்வைத்தனர். விழுமியங்களை விடக் கலையே பெரிதாக எண்ணப்பட்டதால் கலையும் இலக்கியமும் பேசுபொருளை விட வடிவத்தை முதன்மையாகக் கொண்டன. வாழ்க்கை குறித்த ஒட்டுமொத்தப் பார்வை தவிர்க்கப் பட்டு குறுக்கு வெட்டுப் பார்வை முன் வைக்கபட்டது.

டார்வினின் பரிணாமக் கோட்பாடு, சமூகத்தில்  ஆன்மீகத்தின் முக்கியத்துவதையும் அறிவின் தனித் தன்மையையும் குறைத்தது. இதை இணைத்துக் கொண்டு மார்க்ஸ் முன்வைத்த முதலாளித்துவதிற்கு எதிரான கோட்பாடுகள் சிந்தனையில் தாக்கம் செலுத்தத் துவங்கின. இதுவரையிலான மானுட அறிவென்பது சிந்தனையாளர்கள்  இந்த உலகைப்பற்றி நமக்களித்த புரிதல்களே, மாறாக இன்றைய காலகட்டத்திற்கேற்ப உலகை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறதென்ற கருத்தை மார்க்ஸ் முன் வைத்தார்.

[singlepic id=48 float=center]

நகரமயமாக்கல் தீவிரமானது. அழகியலும் அறிவியலும் இணைந்த கட்டுமானங்கள் வரத் துவங்கின. புகைப் படைத்தாலும், தந்தியினாலும், விரைவான போக்குவரத்து வசதிகளாலும் காலம் என்ற கருதுகோள் மாறியது. அதுவரை மருமலர்ச்சிக் கால அறிவியலையும் சிந்தனையையும் கால மாற்றத்திற்கேற்ப சீர்படுத்தி விடலாம் என்ற சிந்தனை பின்னகர்ந்து, எவ்வளவு முயன்றாலும்  காலமென்ற அனுபவமே மாறி விட்ட நூற்றாண்டில் அவற்றை வைத்து எதுவும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். 

இந்த பல்வேறுபட்ட சிந்தனைப் போக்குகளை கலைஞர்கள் தத்தம் துறையில் செயல்படுத்த முனைந்த இயக்கமே நவீனத்துவம் என்று நாம் குறிப்பிடும் இயக்கம்.

இதுவரை தத்துவத்திலிருந்து இலக்கியம் வழியாக பிற கலைகளுக்கு சென்ற கோட்பாடுகள், அந்த வழியைக் கைவிட்டு, தத்துவம் கலையுடனும், தத்துவம் இலக்கியத்துடனும் என இந்த பரிமாற்றம் சகல திசைகளிலும் நிகழத் தொடங்கியது. முரணியக்கத்தை முன் வைத்த ஹெகலுக்கு எதிராக கீர்கேகாடும்(Soren Kierkegaard) நீட்செவும் வைத்த  வாதங்கள் இருத்தலியம்(Existentialism) சார்ந்தவையாக இருந்தன.

மனப்பதிவுவாதம்(Impressionism), மனவெளிப்பாட்டுவாதம்(Expressionism), ராடிகலிசம், படிமவாதம்(Imagism) போன்ற இயக்கங்கள் கலையிலும் இலக்கியத்திலும் பெரும் மாற்றங்களைத் துவக்கின. எஸ்ரா பவுண்டின் படிமவாதம் இலக்கியத்தில் பெரும் அலையை தோற்றுவித்தது, இதுவே முறையாக வகைப்படுத்தப்பட்ட முதல் இலக்கியக் கோட்பாடாக கருதப்படுகிறது. கற்பனாவாதத்தால் நெகிழ்த்தப்பட்ட மொழியை, அதன் கட்டற்றதன்மையையும் மிகையுணர்ச்சியையும்  நீக்கி நேரடியான எளிய அதே சமயம் சீரான மொழியாக முன் வைத்தது.

இந்த முயற்சி இலக்கியத்தில்  அதன் அடிப்படைகளான கதைக்களன், கதைமாந்தர், எழுத்துமுறை, படைப்பில் காலத்தை கையாளும்முறை மற்றும் மொழி ஆகியவற்றை மாற்றி அமைப்பதாக இருந்தது.  உண்மைக்கு மேலாக கலையை, அதன் வடிவத்தை முன் வைத்ததால், வாழ்க்கையை முன்வைப்பது கலை என்பதிலிருந்து கலையை முன்வைப்பதே கலை என்றும் ஆனது.

[singlepic id=49 w=800 h=600 float=center]

பிராய்டின் அடக்கப்பட்ட உணர்வுகளின் தொகுப்பே மனிதன் என்ற சிந்தனையின் வழி,  மனித இருப்பு என்பது இதுவரை புரிந்து வைத்திருந்த அளவு எளிதான ஒன்றல்ல என்றும், மரபான கருவிகளால் புரிந்து கொள்ள இயலாத அளவு சிக்கலானது என்றும் முடிவிற்கு வந்தனர். அந்த ஆழங்களுக்குச்செல்ல நனவோடை உத்தியை பயன்படுத்தத் துவங்கினர். ஜேம்ஸ் ஜோய்சின்  யுலிசிஸ் மற்றும் விர்ஜினியா உல்பின் எழுத்துக்களைப் போல. இந்தப் படைப்புகளின் முக்கிய அம்சம் கதை மாந்தர்களை விட எண்ண ஓட்டங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டது என்பதே. மொழியின் மீதான அறிவின் தளையை அறுக்கமுயன்ற எழுத்துக்கள் இவை எனில், எண்ணங்களாலும் சூழலாலும் கட்டுண்ட மனிதர்களின் செயலாற்ற இயலாத  தயக்கத்தை முன்வைப்பதும் ஒரு வகை எழுத்தாக முன் எடுத்துச் செல்லபட்டது. காப்காவின் விசாரணை போல. 

நவீனத்துவ எழுத்தில் கதையோட்டத்தை விட அக ஓட்ட சித்தரிப்புகளே பிரதானமாக இருந்தன. கதையில் யதார்த்தத்தை முன்வைப்பதை விட கலைஞனின் கருதுகோளை யதார்த்தத்தை விட தீர்க்கமாக முன் வைப்பதை போக்காக கொண்டனர். சுருக்கமான கதை கூறலிலும், சிக்கலான இறுக்கமான மொழிநடையிலும் எழுதினர்.

[singlepic id=51 w=800 h=600 float=center]

உலகப்போர்களுக்குப் பின் வந்த படைப்புகள், ஒரு சமூகமாக மனிதன் வீழ்ந்த கதையை, பேரழிவிற்கு பிறகான வாழ்க்கையின்  சிதைவுகளை   மையப் பொருளாகக் கொண்டன. இலக்கிய வடிவிலும், மொழியின் வெளிப்பாட்டிலும் மரபார்ந்த வடிவங்கள் சிதைக்கப்பட்ட படைப்புகள் உருவாகப் பட்டன. ஸ்காட் பிட்ஸ்ஜெரால்டின் (Scott Fitzgerald) தி கிரேட் காட்ஸ்பி(The Great Gatsby) போல, வில்லியம் பாக்னரின் (William Faulkner) தி சவுண்ட் அண்ட் தி பியூரி (The Sound and the Fury) போல. வடிவத்திலும், கதைக்களனிலும், சித்தரிப்புகளிலும் சிதைவுத்தன்மை கொண்டிருந்தன, டி.எஸ்.எலியட்டின் வேஸ்ட் லேன்ட் போல. வாசகன் வரலாற்றை ஒழுங்குபடுதியே இந்த வகைப் படைப்புகளை அணுக முடியும். ஹெகலின் முழுமை குறித்த கருதுகோளுக்கு நேர் எதிராக இருந்தன இந்த வகைப் படைப்புகள். பின்னாளில் இது நவீனத்துவ இலக்கிய வடிவங்களில் முதன்மையானதாக மாறியது.

சமூகங்களின் சிதைவிலிருந்து, சித்தாந்தங்களின் சிதைவு வரை மனிதர்கள் கைவிடப்பட்டதன் வெவ்வேறு சித்திரங்களை அளிக்கும் படைப்புகள் வெளி வந்தன. தன்னை போஷித்து வந்த பீடத்திலிருந்து மன்னர்களையும், கடவுளையும் கடைசியாக அறிவையும் இறக்கி விட்டபின்பு மனிதர்கள் சென்று அடையும் வெறுமையையும் தனிமையும் வெளிபடுத்தும் படைப்புகளாக இவை இருந்தன. பிரான்ஸ் காப்காவும், காம்யுவும் இந்த வகை படைப்புகளுக்கு முன்னோடிகளாக இருந்தனர்.

[singlepic id=50 w=800 h=600 float=center]

சுருக்கமாகச் சொன்னால்,  அறுநூறு வருடங்களாக மனிதன் தன் அறிவையும், கனவையும் கொடுத்து வளர்த்த சமூகமும், தொழில் நுட்பமும் ஓன்று சேர்ந்து மனிதனை விட பெரிய இயந்திரமாக உருக்கொண்டது. தன் வாழ்வை  எளிமையாகவும் மேலானதாகவும் ஆக்குமென்று எண்ணிய சமூக மாற்றங்கள், மனிதனை தன்னில் ஒரு எளிய உறுப்பாக ஆக்கிக் கொண்டது. அறிவு அபாயமான ஆயுதங்களை உற்பத்தி செய்யவும், உணர்வு நுகர்வுசார்ந்தும், வளர்ச்சி வாழ்க்கையை நெருக்கும் நகரங்களாகவும் மாறியது. இந்த சூழலில் இருந்து வெளியேற முயலும் போராட்டமே நவீனத்துவ கலையானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *