இலக்கிய இயக்கங்கள் – பகுதி – 4

பின் நவீனத்துவம் (Post Modernism)

பின் நவீனத்துவம் என்பது தனிப்பட்ட கலை வடிவமோ, அறிவியக்கமோ அல்ல. மறுமலர்ச்சி காலத்தில் துவங்கிய, சமூகத்தில் தனி மனிதனின் இருப்பின் இடமும், சமூகத்தில் அவனை பிணைக்கும் பண்பாட்டு வெளியின் பொருளும், சமூகம் போன்ற  கருதாக்கங்களின் பொருள் குறித்த தேடலும் நவீனத்துவம் என்றால், அதன் உச்சத்தில் நின்று அடைந்தவற்றில் சிலவற்றை தக்கவைத்துக்கொண்டும், விடுபட்டுப்போனவற்றைச் சேர்த்துக்கொண்டும் மேலான ஒரு கலை பண்பாட்டு வெளியை உருவாக்கும் அடித்தல்களும் திருத்தல்களும் மட்டுமே.

பின் நவீனத்துவமும் சமூகக் காரணிகளால் தோற்றுவிக்கப்பட்டு, தத்துவத்திலும் கலை இலக்கியத்திலும் ஊடுருவிய போக்கு. தனி மனித சிந்தனையையும் இருப்பையும் இலட்சியமாக கொண்டு நகர்ந்த கலை இயக்கம், அதன் உச்சத்தில் நின்று உருவாக்கிய இலட்சிய அமைப்பில் விடுபட்ட புள்ளிகளை கோர்க்கத் துவங்கியது.

இதன் சமூகத் துவக்கப் புள்ளி, சமூக உரிமைப் போராட்டங்களிலும்,  இலக்கிய கோட்பாடுகளில் பெண்ணியத்திலும் பாலுறவின் வெளிப்பாட்டை முன்வைத்தும், பின் காலனீய கோட்பாடுகளாகவும், கலைகளில் நவீனத்துவத்தின், தூய வடிவம் சார்ந்த தேடலுக்கெதிராக, கலையின் வடிவங்களை சிதைத்தும், உருமாற்றியும்  கலை என்ற அமைப்பை கேள்வி கேட்டும் உருவானது.

[singlepic id=56 w=800 h=600 float=center]

பின் நவீனத்துவத்தின்  இயக்கமென்று பீட் தலைமுறையை சொல்லலாம்.  இதன் இலக்கிய முன்னோடிகளாக அலன் கின்ஸ்பெர்க்(Alan Kingsberg), ஜாக் கெரொக்(Jack Kerouac), வில்லியம் பர்ரோஸ்(William Burroughs) போன்றவர்களைக் குறிப்பிடலாம். மேற்குலகின் குடிமைப் பண்பையும், நவீனத்துவத்தின் நகரமயமாக்கலையும் எதிர்த்து எதிர் கலாச்சாரப் பண்புகளாக குடியையும், கொண்டாட்டத்தையும், தனிமைப் படுத்தப் படுதலையும் முன் வைத்தனர். மேற்கின் பார்வைக்கெதிராக புத்திசம், ஜென் புத்திசம், மற்றும் இந்து மரபு உட்பட கீழை மரபுகளை வைத்தனர்.

கலையின் பேசுபொருளாக சுற்றுப்புற சூழல் குறித்த  கவலைகள், நுகர்வு கலாச்சார எதிர்ப்பு, கட்டற்ற வெளிப்பாட்டுத்தன்மை, கீழை தத்துவ சார்பு போன்றவை இருந்தன. நவீனத்துவத்தின் கலை, அதன் தத்துவ தரிசனத்தின் காரணமாக தத்துவத்துறைக்கே அதிகமும் நெருங்கி, பொதுவாழ்க்கையிலிருந்து மிகவும் தனித்து நிறுவனங்களுக்குள்ளும், அமைப்புகளுக்குள்ளும் சிறிய, தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கான வெளிப்பாடாகவே இருந்தது. இதற்கு எதிராக பீட் இயக்கத்தின் படைப்புகள், பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு, கவிதைகள் வாசிக்கப்பட்டு கலையின் மேட்டிமைத்தன்மையிலிருந்து வெளிக்கொணரப்பட்டது. இதைச் செய்ய முயன்ற அமைப்புகள் இயல்பாகவே கலையின் கோட்பாடுகளையும், கலையின் இயல்பையும் கேள்விகள் கேட்டு உருமாற்றம் செய்யத் துவங்கின.  நவீனத்துவ   கலை அமர்ந்திருந்த தத்துவ தளத்தின் பீடம் உடைக்கப் பட்டு, அனுபவ தளத்திற்கும், விசாரணைக்கும் நகர்த்தப் பட்டது.

அனுபவம் சார்ந்த தளத்தில் இயங்கிய படைப்புகள் நவீனத்துவம் முன்வைத்த ‘மாதிரிக் கலைஞனின் வெளிபாடு’ என்ற கருதுகோளை உடைத்து, நவீனத்துவத்தின் ‘கலைஞன்’ என்ற ஆளுமைக் கட்டமைப்பு, அங்கதத்தின் வழியும் தத்துவ  விசாரணை யிலும் பெரிதும் சிதைக்கப் பட்டது. கலைஞன் அவன் சார்ந்த சமூகத்தின், அவன் இயங்கும் மொழியின், அதன் வெளிப்பாட்டு வரலாற்றின் ஒரு பகுதியே என்றும் முன்வைக்கப்பட்டது. விசாரணைத் தளத்தில் இயங்கிய படைப்புக்களில், வடிவம் சார்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கலையின் அனுபவம் படைப்பவனின் செயலில் இருக்கிறதா,படைப்பில் இருக்கிறதா, அல்லது நுகர்பவனின் அறிதலில் இறுக்கிதா என்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டன.

[singlepic id=53 w=800 h=600 float=center]

பின் நவீனத்துவம் தனக்கென்று ஒரு கலை வெளிப்பாட்டை உண்மையில் கைக் கொள்ளவே இல்லை. பெரிதும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த வடிவங்களையே உபயோகப் படுத்திக் கொண்டது. ஆனாலும் அதன்வடிவங்கள் மற்றும் பொருள் சார்ந்த சில கூறுகளை கையாளுவதன் மூலம், புதிய அர்த்தங்களையும் இடைவெளிகளையும் கொண்டு வந்தது. இதன் மூலம் கலைக்கு என நிரந்தரமான தூய வடிவமோ பொருளோ இல்லை என்பதை நிரூபித்தது. எனவே நவீனத்துவம் போல கலையையும் அதன் அனுபவத்தையும் தூய்மை படுத்த முயலாமல், மேலும் மேலும் அதை விரித்தெடுக்க முயன்றது. நவீன ஓவியம் தூய கலைக்கான தேடலை திரைச் சீலைகளிலும், நவீன இலக்கியம் சுயமான பார்வையையும் முன் வைத்தபொழுது, பின்நவீனத்துவக்கலை, அப்போது உருவாகி வந்திருந்த விளம்பர வடிவங்களையும், தொலைக் காட்சியையும் இதர தொழில்நுட்பங்களையும் உள்ளிழுத்துக் கொண்டு வளர்ந்தது. இலக்கியமோ, செவ்விலக்கிய படைப்புகளை எடுத்து, அவற்றின் இடைவெளிகளின் வழியாக புதிய வாசிப்பை முன் வைத்தது.

நவீனத்துவதிற்குப் பின்னான நம்முடைய கலாச்சாரம் என்பது, வளர்ந்த நாடுகளின் முதலாளித்துவம் உருவாக்கிய உலகமயமாக்கலையும், அதன் விளைவான நுகர்வு கலாச்சாரத்தையும் வளர்தெடுத்தது. இதன் கலாசார பதிப்புகளாக நவீனத்துவம் உருவாக்கிய தனி மனிதர்களின் இலட்சிய அடையாளமான பிரபலங்கள், இந்தக் கலாச்சாரத்தை பிரதிநிதிப் படுத்த உட்படுத்தப் பட்டனர். உடைகளும், உபகரனங்களும் பிரபலங்களை உபயோகப் படுத்தத் துவங்கின. அன்றாடவாழ்கையில், நிறுவனங்களின் உருவச் சின்னகள் கொண்ட ஆடைகளையும், பொருட்களையும் பயன்படுத்துவது மனிதர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகப் புரிந்து கொள்ளப் பட்டது.  தேடலுக்கும், சுய விசாரணைக்கும் உண்டான கலையின் வெளிப்பாட்டு வழியை இந்த உலகமயமாக்கலும், நுகர்வு  கலாச்சாரமும் பெரிதும் ஆக்ரமித்துக் கொண்டன. வாழ்வை கலை பிரதிபலிப்பதிலிருந்து மாறி, கலையை வாழ்க்கை  பிரதிபலிக்கத் துவங்கியது.

[singlepic id=54 w=800 h=600 float=center]

எஞ்சிய பகுதியாக கலை என்பது மத, இன, மொழி மற்றும் பால் குறித்த அடையாளங்களை மீட்டுக்கும் ஒரு வெளிபாட்டுத்தளம் மட்டுமாக சுருக்கிப் பார்க்கப் பட்டது. கலையின் மேலான மற்றும் தரமற்ற வெளிப்பாடுகள் என்ற கருதுகோள் இவற்றால் மங்கியது. எனவே கலையை அவற்றின் அரசியல் மற்றும் கருத்துருவாக்கம் சார்ந்த பார்வையைக் கொண்டே விளங்கிக் கொள்ளமுடியுமென்று முன் வைக்கப் பட்டது. விளைவாக, கலையில் அதன் கலைத்தன்மை மற்றும் அழகியல் பார்வை குருக்கபட்டது. கலை என்பது தன்னிச்சையான வெளிப்பாடு மட்டுமல்ல, அதற்குப் பின்னால் அரசியல் மற்றும் கருத்து சார்ந்த ஆபத்துகளும் இருப்பதாக பார்க்கப் பட்டது. இந்தக் கருதுகோளே, முன் முடிவுள்ள அரசியல் மற்றும் கருத்து சார்ந்த பார்வை கொண்டது என்று ஆண்டன் போரிவக் போன்றோர் முன் வைத்தனர்.

இந்த கருத்துகளால் உண்டான பொருள் மயக்கங்களில், பின் நவீனத்துவம், நவீனத்துவத்தைப் போல தெளிவான, தனிப்பட்ட பார்வையையோ, அதன் பின்னால் இருக்கும் எண்ணம் மற்றும் அறிவு  சார்ந்த  வெளிப்பட்டிற்கு பதில்,  அக வயமாகவோ புற வயமாகவோ எந்த முடிவுக்கும் வராமல், அறிவின் வெளிப்பாட்டை முன் வைக்காமல் உள்ளுணர்வு சார்ந்த, சொல் நிலைக்கு ஏற்ற வெளிப்பாட்டை மட்டும் முன் வைத்தது. படைப்பு ஒரு தெளிவான, தீர்மானமாக அல்லாமல், மயங்கிய பல் பொருள்தன்மையுடையதாகவும் , சூழலின் பிரதிபலிப்பாகவும் மட்டுமே இருந்தது. அதாவது கலைஞன்,  பண்பாட்டின் கலை வெளிப்பாடு ஊடுருவும் ஊடகமாக மட்டும் முன் வைக்கப்பட்டான். பெருங்கதையாடல், வரலாறு, யதார்த்தம் மற்றும் அக வய உண்மை ஆகிய நான்கு கூறுகளும்  கேள்விக்குள்ளாக்கப்பட்டன. திறந்த, திரிக்கப் படக் கூடிய, பல்வேறு பொருள்கொள்ளக் கூடிய ஒன்றாக படைப்பு மாறியது. சுருக்கமாகக் கூறினால், நவீனத்துவம் புகைப்படத்தை வைத்த இடத்தில் பின் நவீனத்துவம் கண்ணாடியை வைக்கிறது.

ஒரு நவீனத்துவ சிறுகதை தெளிவாக ஒரு மையத்தை எழுப்பி நகர்கிறது. ஆசிரியனின் குரல் அல்லது கருத்து மையமாக ஒளிர்கிறது. பின் நவீனத்துவத்தில் சூழ் நிலைகள் உருவாக்கப்பட்டு, பல்வேறு கதாபத்திரங்கள் தங்கள் தரப்பை முன் வைக்கின்றன. முடிவை எடுக்கும் பொறுப்பு வாசகனுக்கு உரியதாகிறது.

இப்படிச் செய்வதால், படைப்பின் பொருள் படைபவனின் அறிதலுக்கேற்ப   குறுக்கப் படுவதில்லை. மாறாக வாசகன் ஆசிரியனுக்கு நெருக்கமாக ஆகிறான். தன்  கற்பனையால் இடைவெளிகளை நிரப்பும் பொழுது, ஒரு எல்லைவரை  சக எழுத் தாளனும் ஆவான்.  ஏனெனில் படைப்பு தரும் அறிதலுக்கு, அறிவைத் தவிரவும் வேறு வழிகளும், அறிவால் முற்றிலும் தீர்மானித்துவிட முடியாதவையும் இருக்கின்றன.

அறிவொளிக்காலம் முன்வைத்த அறிவுசார்ந்த பார்வை முழுமையானது அல்ல, ஏனெனில் இந்தப் பிரபஞ்சம் இயந்திரத்தனமானதோ, ஒற்றைப்படைத் தன்மையானதோ இல்லை, மாறாக வரலாற்றுத் தன்மை உடையதும், ஒன்றுடன் ஓன்று தொடர்புருத்தப் பட்டதும், தனித்த கூறுகளாலும் ஆனது. இந்த உலகம் நம்மால்  கண்டுபிடிக்கப்பட அங்கே காத்துக் கொண்டிருந்தது அல்ல, மேலும் உண்மை என்பது  ஒற்றைத் தன்மையோ இறுதியான ஒன்றோ அல்ல, அது நெகிழ்ந்த பல பக்கங்கள் கொண்ட, நம்முடைய பார்வையைப் பொருத்தது.

எனவே பின் நவீனத்துவ பார்வையில் உலகளாவிய பார்வை  என்பது கூட சிறிய சமூகங்களின் பார்வையைக் கொண்டு பார்க்கப் படுவதாகவே இருக்கும். ஏனெனில் நம் பார்வையை தீர்மானிப்பதில் நாம் யார் என்பதற்கும் சமானமான பங்கு உள்ளது. இந்த எண்ணமே அறிவொளிக் காலம் முதல் துவங்கி வந்த ஒற்றை உலகம் ஒற்றை இருப்பு என்பது கைவிடப் பட்டு, பல்வேறு குழுக்களை, இனங்களை,  மொழியை கொண்ட  ஒற்றை இருப்பாக விரித்துக் கொள்ள உதவியது. இந்தத் தன்மையை வெளிபடுத்தும் இலக்கியம் என்பது பொதுப்படுத்தப்பட்ட உண்மையை அல்லாது, ஒதுக்கப்பட்ட மனிதர்களை மையமாக்கி படைக்கப்பட்டது. இதைக் கையாள, கதை கூறலில் ஒற்றைப் படையான கதை கூறலைத் தவிர்த்து,  பலவேறுபட்ட மாற்றுக் குரல்களைக் கொண்டு ஒன்றின் மீது ஓன்று என பல அடுக்குகளாக கூறப் பட்டது.

[singlepic id=55 w=800 h=600 float=center]

வடிவ ரீதியாக அனைத்து கலை வெளிப்பாட்டு வடிவங்களும் இணைத்துக் கொள்ளப் பட்டன, நாவலுக்குள் நாடகமும், கவிதையும் ஓவியத்தில் சிற்பமும் புகைப்படக் கலையில் நாடகீயமும் சேர்த்துக் கொள்ளப் பட்டன.

மீமொழி(Meta Language)  பின் நவீனத்துவத்தின் ஒரு முக்கிய அம்சம். நவீனத்துவம் படைப்பை தரிசனத்தின் வெளிப்பாடாக முன்வைக்கிறது என்றால், பின் நவீனத்துவம் படைப்பை படைப்பாகவே முன்வைக்கிறது.  அதன் வடிவத்தில், தான்  இயங்கும் படைப்பு  மொழி குறித்த பிரக்ஞை கொண்டு வெளிப்படும். உதாரணமாக ஒரு வாழ்க்கையை விவரிக்கும் நாவல் அதை வாழ்க்கையாகவே முன் வைக்காமல் வாழ்க்கை  குறித்த நாவலாக முன் வைக்கும். அப்போது  அந்த வடிவம்  சார்ந்த சலுகைகள் கிடைக்கிறது, கூடவே நாவலுக்கும். அது காட்டும் வாழ்க்கைக்கும், வாசகனுக்கும் நாவலுக்கும் உள்ள தொடர்புகளை குறித்து விவாதிக்க இடம் தருகிறது. இந்த மீமொழி, கதை பற்றிய தன்னுணர்வு கொண்ட கதை சொல்லல் மட்டுமல்ல, மேற்கோளாக பிற படைப்புகளைக் கையாளுவது, முரண் நகை, பொருள் மயக்கம், திரிப்பு, போலச் செய்தல், நையாண்டி மற்றும் பல்பொருள் தன்மை போன்றவற்றை உள்ளடக்கியது.

இதோடு நெருங்கிய மற்றொரு முக்கிய அம்சம் ஊடுபிரதித் தன்மை (Intertextuality). படைப்பு கலைஞனின் முற்றான தனி இருப்பில் இருந்து வெளிப்பட்ட தனிப்  படைப்பு என்ற நவீனத்துவ கருதுகோளின் நேர் எதிர் வடிவம் இது. படைப்புக்குள் அந்த மொழியின், பண்பாட்டின் வேறு படைப்புகளுக்கும் உருவாகப்படும் இந்த இழை படைப்பை ஆசிரியனின் வெளிப்பாடு என்பதிலிருந்து, மொழியின் பண்பாட்டின் சூழலிலிருந்து தோன்றும் ஒரு மொழிபாக ஆக்குகிறது. எனவே ஆசிரியனின் இடம் பின்னகர்த்தப் பட்டு படைப்பும் அது சார்ந்த பண்பாடும் முன்னெடுக்கப் படுகிறது.

மற்றொரு கூறான அங்கதம், படைப்பில் அங்கதத்துக்குள்ளாகும்  படைப்பையோ படைப்பாளியையோ  அவமதிக்க அல்ல, அந்த படைப்பு  உருவான காலகட்டத்துக்கும், அதன் மதிப்பீடுகளுக்கும், தற்காலமதிப்பீடுகளுக்கும் உள்ள வேறுபாட்டைச்சுட்டிக்காட்டவே. பின் நவீனத்துவ இலக்கியத்தில் முரண் நகையும் அங்கதமும் நெருங்கிய தொடர்புள்ளவை. பொதுவாக விமர்சன நோக்கில் கையாளப்படுபவை, படைப்பின் பேசு பொருளை மட்டுமல்ல அந்த படைப்பையும் கூட. இந்த அம்சமே படைப்பை படைப்பாகவே உணர்த்தும் அதே நேரத்தில் பேசுபொருளைப்பற்றிய உரையாடலாகாவும் வைக்கிறது. நவீனத்துவத்தின் இறுக்கத்திற்கு எதிரான முக்கியமான அம்சம் இது.

மற்றொன்று, கதையின் நேர்கோட்டுத் தன்மை, இது நவீனத்துவத்தின் குணம். பின் நவீனத்துவம் காலத்தை இடம் மாற்றுகின்றது, கதையில் கதையின் நிஜமும் படைப்பின் வெளி உலகமும் கலந்து இருக்கும், கதாசிரியர் கதையில் வருவது, அல்லது ஆசிரியர் அல்லது கதாபத்திரங்கள் வாசகரை விளித்து நேரடியாக பேசுவது போன்றவை. இவற்றின் நோக்கம் ஒன்றே, நீங்கள் வாசிப்பது புனைவே தவிர நிஜமல்ல என்ற போதத்தை படைப்பில் கொண்டு வருவது. இந்த சுதந்திரம் எழுத்தில் கட்டற்ற தன்மைகளையும், கனவுகளையும், அபோத நிலை எழுத்தையும் பயன்படுத்த  உதவுகிறது, இது நவீனத்துவத்தின்  இறுக்கமான போத நிலையில் எழுதப் பட்ட அக நிலைப் பார்வைக்கு எதிரானது. வில்லியம் பர்ரோஸ்(William Burroughs) எழுதிய தி  நேகெட் லஞ்ச் (The Naked Lunch) போல.

தெரிதாவும் (Jacques Derrida), பார்த்தும் (Roland Barthes) முன்வைத்த மொழியியலின் இயல்புகளை படைப்பில் கையாளுதல் இன்னொரு அம்சம். வார்த்தைகள் மொழியில் குறிப்பிடப்படும் அதே அர்த்தத்தில் பின் நவீனத்துவ படைப்பில் கையாளப்படுவதில்லை. வார்த்தைகளுக்கும் அதன் நேரடி அர்த்தங்களுக்கும் உள்ள தொடர்பை மட்டுப்படுத்தி அதன் பண்பாட்டு அர்த்தத்தின் இடைவெளியில் புதிய அர்த்தங்களை தோற்றுவித்தல் முக்கிய அம்சம். நவீனத்துவ படைப்புகளின் தலைப்புகள் படைப்புக்குள் உள்ள ஒன்றை குறிப்பிட உதவும்பொழுது, பின் நவீனத்துவ படைப்பின் பேசு பொருளுக்கும் அதன் பண்பாட்டுவெளிக்கும் உள்ள தொடர்பை முன் வைப்பதாக இருக்கும். இதன் மூலம் படைப்பு, எழுத்தாளன் மற்றும் வாசகன், கலை மற்றும் வாழ்க்கை, நிஜதன்மை மற்றும் கலையனுபவம், அனுபவம் மற்றும் புனைவு போன்ற வரையறைகள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு விவாதிக்கப் படுகின்றன.

இந்த எல்லைகள் நவீனத்துவம் வைப்பது போல இறுதியானது அல்ல, எனவே ஒவ்வொரு படைப்பும் அது முன் வைக்கும் பேசுபொருளுடன் அதைப் பேசுவதன் மொழி குறித்தும் பரிசீலனை செய்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என தனது அணுகுமுறைகளை தளர்வாகவே வைத்திருகிறது  பின்நவீனத்துவம் .

நவீனத்துவம் கலையை, ஆழமான கருத்தியல் வெளிப்பாட்டுச் செயல்பாடாக முன் வைத்தது. பின் நவீனத்துவம், கருதியல்களையோ ஆழமான உண்மைகளையோ முன் வைக்க மொழியின் வெளி போதுமானதல்ல, எனவே அத்தகைய தெளிவான செயல்பாடுகளின் மீது ஐயம் கொண்டிருந்ததால், மிக எளிய மேலோட்டமான பரப்பை உருவாக்க முனைந்தது. மொழியின் பரப்புகளின் மீது வெவ்வேறு தளத்தில் இயங்கும் குறியீடுகளை வைப்பதன் மூலம், அவை தங்களுக்குள் ஊடாடி உருவாகும் பிரதித் தன்மையை நம்பியே பின் நவீனத்துவ படைப்பு இயங்குகிறது.

அப்படியெனில் நவீனத்துவம் துவங்கிய 15-ஆம் நூற்றாண்டு துவங்கி அதன் உச்சத்தை அடைந்த 20-ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்ட முயற்சிகளை எல்லாம் பின் நவீனத்துவம் நிராகரிக்கிறதா என்றால் இல்லை, ஒரு வகையில் அதை முழுமை செய்யவே முயல்கிறது.

மேற்குறிப்பிட்ட பல்வேறு கூறுகள் எங்கிருந்து பெறப்பட்டு தொகுக்கப்பட்டன  என்பதைப் புரிந்து கொண்டால்,  அது எந்தக்கூறுகளையெல்லாம் எந்த இயக்கத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறதென்றும் எவற்றை எல்லாம் விட்டுத் தள்ளுகிறது என்றும் புரிந்து கொள்ளலாம்.

பிராய்டின் தனி மனிதன் சமூகத்தினால்  அடக்கப்பாட்ட பாலியல், சமூக விருப்பங்கள் கனவுகள் மற்றும் அதிவிருபங்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டவன் என்ற கருதுகோளை முன் வைத்து, அவற்றை எல்லாம் படைப்பு வெளியில் முன்வைக்க வேண்டிய தேவையை எடுத்துக் கொண்டது.

நீட்சேயின் இன்மைவாதம்(Nihilism) மற்றும் சந்தேகத்தன்மை முதலியவற்றால் உண்மையை பிரதிபலிப்பது என்பதன் மீதான அவநம்பிக்கையை எடுத்துக் கொண்டது. விட்கென்ஸ்டைனின்(Ludwig Wittgenstein) மொழிக் கோட்பாடுகளிலிருந்து மொழி என்பது உண்மையை அல்லது பொருளை நேரடியாகக் குறிப்பிடும்  அறிவார்ந்த ஊடகம் அல்ல, அது குறிப்பிடப்படும் சந்தர்ப்பங்களைப்பொருத்து உருவாகும் குறியீடுகள், தனிச்சையாக அர்த்தங்களை உருவாக்கும் அமைப்பு என்ற கருதுகோளை எடுத்துக் கொண்டது.

ஐன்ஸ்டீனின் சார்பியலிலிருந்து(Relativity Theory) நிச்சயமான, அறிவார்ந்த, தர்க்கம் சார்ந்த பார்வைகளைக் குறித்த கேள்விகளை எடுத்துக் கொண்டது. தியரி ஒப் காம்ப்ளெக்சிட்டி (Theory of Complexity), மண்டல்ப்ரோத்ஸின் (Benoit Mandelbrot) பிராக்டல் ஜியோம்தி(Fractal Geometry) போன்றவற்றயும் எடுத்துக் கொண்டது.

[singlepic id=57 w=800 h=600 float=center]

புகைப்படம், திரைப்படம் போன்றவை மக்களிடம் உருவாக்கிய, உலகத்தைப் பற்றிய புதிய பார்வைகளை எடுத்துக் கொண்டது. பேர்உற்பத்தியை சாத்தியமாக்கிய இவற்றால், படைப்பில் படைப்பாளியின் முழு முற்றான அதிகாரம் (Authorship) குறித்த குழப்பங்களை எடுத்துக் கொண்டது. இதுவே பின் நவீனத்துவத்தின் முக்கிய கலைக் கூறாக இருந்து வந்தது.

பரப்புக் கலைகளால் அதிகம் பயன்படுத்தப்பட்டு,  அதனால் அர்த்தமிழந்த மொழியில் உருவாக்கப்படும் தீவிரக்கலைகளின் அர்த்தமின்மையை  பரப்புக் கலைகளிலிருந்து எடுத்துக் கொண்டது.

கலையில், பேசப்படும் பொருளுடன் அந்த உரையாடல் நிகழ்வது ஒரு படைப்பில் மட்டுமே தவிர அதுவே வாழ்கை அல்ல, எனவே நாவலை வசிக்கும் வாசகன் அந்த அது ஒரு செயல்பாடு என்ற போதத்துடனேயே  செய்ய  வேண்டும் என்ற பிரக்ஞையை  டான் கியிச்சொட்டின்(Don Quixote), லாரன்ஸ் ஸ்டேர்ன்(Laurence Sterne), போன்றவர்களின் படைப்புகளிலிருந்து எடுத்துக்கொண்டது.

மார்ஸல் ப்ரோஸ்ட்(Marcel Proust), பிரான்ஸ் காப்கா போன்றவர்களிடம் வெளிப்பட்ட இன்மைவாத கருத்துக்களையும் எடுத்துக்கொண்டது. நவீனத்துவ கலை இயக்கங்களான டடாயிசம் (Dadaism), மீயதார்த்தம்(Surrealism) போன்றவைகளிலிருந்து சிதைவுகள், கனவுத்தன்மை மற்றும் விளையாட்டுத் தன்மை போன்றவற்றை எடுத்துக் கொண்டது.

மனவெளிப்பாட்டுவாதம், பியுச்சரிசம்(Futurism), கன்ஸ்ட்ரக்டிவிசம்(Constructivism) போன்றவைகளிலிருந்து மரபார்ந்த தன்மைகளையும், ஒழுங்கு வடிவங்களையும் மையமான பேசுபொருளையும் ஒதுக்கும் பார்வையை எடுத்துக் கொண்டது. மனப்பதிவுவாதத்திலிருந்து உள்ளதை உள்ளபடியே சித்தரிக்கும் தன்மையைவிடுத்து, குறிப்பிட்ட பேசுபொருள் குறிப்பிட்ட காலத்தில் தோன்றியவிதத்தை  படைப்பதை எடுத்துக் கொண்டது.

நிறுவனங்களாக கருத்தியல்கள் மாறிவரும் சமூகத்தில் உருவாகும் அபத்த விளைவுகளையும், வெளிப்பாடு சார்ந்த கேள்விகளையும், எது கலை என்பதன் வரையறைகளையும்,  மர்ச்சல் டுசாம்பின் (Marcel Duchamp) தரிசனத்திலிருந்து எடுத்துக் கொண்டது. இயந்திரமயமாக்கலின் காலகட்டத்தில், கலையின் பொருள் மற்றும் கலையில் கலைஞனின் இடம் ஆகியற்றை கேள்விக்குள்ளாக்கும் விவாதத்தை டுசாம்பிடம் இருந்தே பெற்றுக் கொண்டது.

நம்முடைய மரபார்ந்த வடிவங்கள் அவற்றின் உச்சத்தை அடைந்து சலித்து விட்டன, எனவே புதிய வடிவங்கள் தேவை என்று கூறிய  ஜான் பார்த்தின்(John Barth) லிடரச்சர் ஆப் எக்ஷாஷன்(Literature of Exhaustion) என்ற கருத்தியலிலிருந்து எடுத்துக்கொண்டது. புதிய மொழியாக பொதுத்தளத்தில் புழங்கிய வடிவங்களையே கலையின் வடிவங்களாகவும் எடுத்துக் கொண்டது.

இப்படியாக, தனிமனிதனின் சுதந்திரத்திற்கும், கலை வெளிப்பாட்டிற்குமாக ஆரம்பித்த தேடல், சமூகத்தின் தேவையையும் உள்ளடக்கி வளர்ந்து, தனி மனிதன் தன்னுடைய சுதந்திரத்தை இழக்காமல், அதே நேரம் மேலானதொரு சமூகத்திற்கு தன்னுடைய பங்களிப்பை தருவதற்கான புரிதல்களை அளித்தது.

இலக்கிய இயக்கங்கள் – பகுதி – 3

நவீனத்துவம் (Modernism)

நவீனத்துவம் என்பது நாம் சற்று முன்பு குறிப்பிட்டது போல, 14-ஆம் நூற்றாண்டில் மதத்திடமிருந்தும் அரசுகளிடமிருந்தும், 17-ஆம் நூற்றாண்டில் அறிவிடமிருந்தும், 18-ஆம் நூற்றாண்டில் உணர்ச்சிகளிடமிருந்தும் தன்னுடைய தனி மனித இருப்பை வரையறை செய்து, தன்னை முன்வைத்துக் கொள்ளும் முயற்சியே. எதிலிருந்து விடுதலை அடைவது என்பதும் எதை முன்வைத்து அதைச் செய்வது என்பதுவுமே இந்தத் தேடல்களின் ஆதரமாக இருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பகுதிகளில் புகைப்படக் கலையின் வருகையும்  பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னான நாட்களும் தொழில் நுட்ப மாறுதல்களும்  இந்த ஒட்டுமொத்தப் பயணத்தை உச்சம் கொள்ளச் செய்தன. அதுவரையிலான விக்டோரியன் மதிப்பீடுகளின் பொருளின்மையை உணர்ந்து புதிய பண்பாட்டிற்கான தேடலை துவக்கி இருந்தனர்.

[singlepic id=52 w=800 h=600 float=center]

மார்க்ஸின் சமூகம் சார்ந்த கருத்துக்களும், பிராய்ட்டின் தனி மனிதன் சார்ந்த கருத்துக்களும், டார்வினின் இயற்கை சார்ந்த கருத்துக்களும், சசூரின் (Ferdinand de Saussure) மொழியியல் கோட்பாடுகளும், ஐன்ஸ்டீனின்  காலம் மற்றும் சார்பியல் கோட்பாடுகளும் மேற்கில் அதுவரை நிலவிவந்த சிந்தனைகளை உருமாற்றம் கொள்ளச் செய்தன. குடிமைப் பண்பு கொண்ட  சமூகம் , வரலாறு, தூய தர்க்கம், உள்ளுணர்வு மற்றும் இயற்கை என அணைத்து தரப்பையும் முன் வைத்து சிந்தனைகள் வெளிப்படத் துவங்கின.

1870-களில் வரலாறும் சமூகமும் இயல்பாகவே முன்னகர்ந்து கொண்டிருகின்றன என்ற கருத்து கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. எனவே நவீனத்துவர்கள் வரலாற்றை நிராகரித்து, தனி மனித இருப்பையே பிரதானமாக முன்வைத்தனர். விழுமியங்களை விடக் கலையே பெரிதாக எண்ணப்பட்டதால் கலையும் இலக்கியமும் பேசுபொருளை விட வடிவத்தை முதன்மையாகக் கொண்டன. வாழ்க்கை குறித்த ஒட்டுமொத்தப் பார்வை தவிர்க்கப் பட்டு குறுக்கு வெட்டுப் பார்வை முன் வைக்கபட்டது.

டார்வினின் பரிணாமக் கோட்பாடு, சமூகத்தில்  ஆன்மீகத்தின் முக்கியத்துவதையும் அறிவின் தனித் தன்மையையும் குறைத்தது. இதை இணைத்துக் கொண்டு மார்க்ஸ் முன்வைத்த முதலாளித்துவதிற்கு எதிரான கோட்பாடுகள் சிந்தனையில் தாக்கம் செலுத்தத் துவங்கின. இதுவரையிலான மானுட அறிவென்பது சிந்தனையாளர்கள்  இந்த உலகைப்பற்றி நமக்களித்த புரிதல்களே, மாறாக இன்றைய காலகட்டத்திற்கேற்ப உலகை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறதென்ற கருத்தை மார்க்ஸ் முன் வைத்தார்.

[singlepic id=48 float=center]

நகரமயமாக்கல் தீவிரமானது. அழகியலும் அறிவியலும் இணைந்த கட்டுமானங்கள் வரத் துவங்கின. புகைப் படைத்தாலும், தந்தியினாலும், விரைவான போக்குவரத்து வசதிகளாலும் காலம் என்ற கருதுகோள் மாறியது. அதுவரை மருமலர்ச்சிக் கால அறிவியலையும் சிந்தனையையும் கால மாற்றத்திற்கேற்ப சீர்படுத்தி விடலாம் என்ற சிந்தனை பின்னகர்ந்து, எவ்வளவு முயன்றாலும்  காலமென்ற அனுபவமே மாறி விட்ட நூற்றாண்டில் அவற்றை வைத்து எதுவும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். 

இந்த பல்வேறுபட்ட சிந்தனைப் போக்குகளை கலைஞர்கள் தத்தம் துறையில் செயல்படுத்த முனைந்த இயக்கமே நவீனத்துவம் என்று நாம் குறிப்பிடும் இயக்கம்.

இதுவரை தத்துவத்திலிருந்து இலக்கியம் வழியாக பிற கலைகளுக்கு சென்ற கோட்பாடுகள், அந்த வழியைக் கைவிட்டு, தத்துவம் கலையுடனும், தத்துவம் இலக்கியத்துடனும் என இந்த பரிமாற்றம் சகல திசைகளிலும் நிகழத் தொடங்கியது. முரணியக்கத்தை முன் வைத்த ஹெகலுக்கு எதிராக கீர்கேகாடும்(Soren Kierkegaard) நீட்செவும் வைத்த  வாதங்கள் இருத்தலியம்(Existentialism) சார்ந்தவையாக இருந்தன.

மனப்பதிவுவாதம்(Impressionism), மனவெளிப்பாட்டுவாதம்(Expressionism), ராடிகலிசம், படிமவாதம்(Imagism) போன்ற இயக்கங்கள் கலையிலும் இலக்கியத்திலும் பெரும் மாற்றங்களைத் துவக்கின. எஸ்ரா பவுண்டின் படிமவாதம் இலக்கியத்தில் பெரும் அலையை தோற்றுவித்தது, இதுவே முறையாக வகைப்படுத்தப்பட்ட முதல் இலக்கியக் கோட்பாடாக கருதப்படுகிறது. கற்பனாவாதத்தால் நெகிழ்த்தப்பட்ட மொழியை, அதன் கட்டற்றதன்மையையும் மிகையுணர்ச்சியையும்  நீக்கி நேரடியான எளிய அதே சமயம் சீரான மொழியாக முன் வைத்தது.

இந்த முயற்சி இலக்கியத்தில்  அதன் அடிப்படைகளான கதைக்களன், கதைமாந்தர், எழுத்துமுறை, படைப்பில் காலத்தை கையாளும்முறை மற்றும் மொழி ஆகியவற்றை மாற்றி அமைப்பதாக இருந்தது.  உண்மைக்கு மேலாக கலையை, அதன் வடிவத்தை முன் வைத்ததால், வாழ்க்கையை முன்வைப்பது கலை என்பதிலிருந்து கலையை முன்வைப்பதே கலை என்றும் ஆனது.

[singlepic id=49 w=800 h=600 float=center]

பிராய்டின் அடக்கப்பட்ட உணர்வுகளின் தொகுப்பே மனிதன் என்ற சிந்தனையின் வழி,  மனித இருப்பு என்பது இதுவரை புரிந்து வைத்திருந்த அளவு எளிதான ஒன்றல்ல என்றும், மரபான கருவிகளால் புரிந்து கொள்ள இயலாத அளவு சிக்கலானது என்றும் முடிவிற்கு வந்தனர். அந்த ஆழங்களுக்குச்செல்ல நனவோடை உத்தியை பயன்படுத்தத் துவங்கினர். ஜேம்ஸ் ஜோய்சின்  யுலிசிஸ் மற்றும் விர்ஜினியா உல்பின் எழுத்துக்களைப் போல. இந்தப் படைப்புகளின் முக்கிய அம்சம் கதை மாந்தர்களை விட எண்ண ஓட்டங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டது என்பதே. மொழியின் மீதான அறிவின் தளையை அறுக்கமுயன்ற எழுத்துக்கள் இவை எனில், எண்ணங்களாலும் சூழலாலும் கட்டுண்ட மனிதர்களின் செயலாற்ற இயலாத  தயக்கத்தை முன்வைப்பதும் ஒரு வகை எழுத்தாக முன் எடுத்துச் செல்லபட்டது. காப்காவின் விசாரணை போல. 

நவீனத்துவ எழுத்தில் கதையோட்டத்தை விட அக ஓட்ட சித்தரிப்புகளே பிரதானமாக இருந்தன. கதையில் யதார்த்தத்தை முன்வைப்பதை விட கலைஞனின் கருதுகோளை யதார்த்தத்தை விட தீர்க்கமாக முன் வைப்பதை போக்காக கொண்டனர். சுருக்கமான கதை கூறலிலும், சிக்கலான இறுக்கமான மொழிநடையிலும் எழுதினர்.

[singlepic id=51 w=800 h=600 float=center]

உலகப்போர்களுக்குப் பின் வந்த படைப்புகள், ஒரு சமூகமாக மனிதன் வீழ்ந்த கதையை, பேரழிவிற்கு பிறகான வாழ்க்கையின்  சிதைவுகளை   மையப் பொருளாகக் கொண்டன. இலக்கிய வடிவிலும், மொழியின் வெளிப்பாட்டிலும் மரபார்ந்த வடிவங்கள் சிதைக்கப்பட்ட படைப்புகள் உருவாகப் பட்டன. ஸ்காட் பிட்ஸ்ஜெரால்டின் (Scott Fitzgerald) தி கிரேட் காட்ஸ்பி(The Great Gatsby) போல, வில்லியம் பாக்னரின் (William Faulkner) தி சவுண்ட் அண்ட் தி பியூரி (The Sound and the Fury) போல. வடிவத்திலும், கதைக்களனிலும், சித்தரிப்புகளிலும் சிதைவுத்தன்மை கொண்டிருந்தன, டி.எஸ்.எலியட்டின் வேஸ்ட் லேன்ட் போல. வாசகன் வரலாற்றை ஒழுங்குபடுதியே இந்த வகைப் படைப்புகளை அணுக முடியும். ஹெகலின் முழுமை குறித்த கருதுகோளுக்கு நேர் எதிராக இருந்தன இந்த வகைப் படைப்புகள். பின்னாளில் இது நவீனத்துவ இலக்கிய வடிவங்களில் முதன்மையானதாக மாறியது.

சமூகங்களின் சிதைவிலிருந்து, சித்தாந்தங்களின் சிதைவு வரை மனிதர்கள் கைவிடப்பட்டதன் வெவ்வேறு சித்திரங்களை அளிக்கும் படைப்புகள் வெளி வந்தன. தன்னை போஷித்து வந்த பீடத்திலிருந்து மன்னர்களையும், கடவுளையும் கடைசியாக அறிவையும் இறக்கி விட்டபின்பு மனிதர்கள் சென்று அடையும் வெறுமையையும் தனிமையும் வெளிபடுத்தும் படைப்புகளாக இவை இருந்தன. பிரான்ஸ் காப்காவும், காம்யுவும் இந்த வகை படைப்புகளுக்கு முன்னோடிகளாக இருந்தனர்.

[singlepic id=50 w=800 h=600 float=center]

சுருக்கமாகச் சொன்னால்,  அறுநூறு வருடங்களாக மனிதன் தன் அறிவையும், கனவையும் கொடுத்து வளர்த்த சமூகமும், தொழில் நுட்பமும் ஓன்று சேர்ந்து மனிதனை விட பெரிய இயந்திரமாக உருக்கொண்டது. தன் வாழ்வை  எளிமையாகவும் மேலானதாகவும் ஆக்குமென்று எண்ணிய சமூக மாற்றங்கள், மனிதனை தன்னில் ஒரு எளிய உறுப்பாக ஆக்கிக் கொண்டது. அறிவு அபாயமான ஆயுதங்களை உற்பத்தி செய்யவும், உணர்வு நுகர்வுசார்ந்தும், வளர்ச்சி வாழ்க்கையை நெருக்கும் நகரங்களாகவும் மாறியது. இந்த சூழலில் இருந்து வெளியேற முயலும் போராட்டமே நவீனத்துவ கலையானது.